பொதுவாக அழுதால்தான் கண்ணீர் வரும் என்று நாம் நம்புகிறோம். ஆனால், சாதாரணமாகவே கண்ணில் கண்ணீர் (Tears) சுரந்துகொண்டுதான் இருக்கிறது என்றாலும், நாம் அதை பெரும்பாலும் உணர்வதில்லை.

நெற்றியில் புருவம் தொடங்குமிடத்துக்குப் பக்கத்தில் கண்ணுக்கு ஒன்று வீதமாக இரண்டு கண்ணீர் சுரப்பிகள் இருக்கின்றன. கண்ணீர் சுரப்பியில் சுரக்கும் கண்ணீர், கண்இமைத்தலின் மூலமாக மேல் மற்றும் கீழ் இமைகளின் விளிம்போரத்தில் இருக்கும் சிறிய திறப்பு வழியாக, கண்ணீர் நாளக்குழாய் மூலம் கண்ணீர்ப்பையை (Lacrimal Sac) அடைகிறது. பிறகு அங்கிருந்து மூக்குக்கும் தொண்டைக்கும் சென்று ஆவியாகிவிடுகிறது. இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு செயல்.

ஒருவர் அழும்போது உணர்ச்சிவசப்படுவதால் கண்ணீர் சுரப்பிகள் தூண்டப்பட்டுக் கண்ணீர் அதிகமாகச் சுரக்கிறது. இதனால், திடீரென வெள்ளப்பெருக்குபோல் உற்பத்தியாகும் கண்ணீர், இமைகளில் உள்ள திறப்புவழியாக முழுவதுமாக வெளியேற முடியாத நிலையில், எஞ்சிய கண்ணீர் கண்ணிலிருந்து தாரை தாரையாகக் கன்னங்களில் வடிகிறது. இதுபோன்ற நேரத்தில்தான், கண்ணீரை நாம் உணர்கிறோம். அழும்போது அதிகப்படியான கண்ணீர் உள்ளே செல்வதால்தான் மூக்கும் ஒழுகுகிறது.


இயல்புக்கு மாறான கண்ணீர்

பிறந்த குழந்தைக்கும் சிலநேரம் இயல்புக்கு மாறாகக் கண்ணிலிருந்து நீர் வடியலாம். கண்ணில் ஏற்பட்ட (Infection) நோய்த்தொற்று, இதற்குக் காரணமாக இருக்கலாம். சில நேரம் கண்ணீர்ப்பையில் ஏற்பட்ட அடைப்பும் காரணமாக இருக்கலாம். கண்ணில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் சொட்டுமருந்து மூலம் சரிசெய்யலாம். கண்ணீர்ப்பையில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், சிலருக்குச் சொட்டுமருந்துடன் மருத்துவர் சொல்கிறபடி மூக்குக்கு அருகில் ‘மசாஜ்’ செய்ய வேண்டிவரும். ஒருசில குழந்தைகளுக்குச் சிறிய அறுவைசிகிச்சையும் செய்ய வேண்டியிருக்கலாம்.

பள்ளி செல்லும் வயதில் குழந்தைகளுக்குக் கண்ணில் நீர் வடிவதற்கு, பார்வைக் குறைபாடு காரணமாக இருக்கலாம். கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் கண்ணாடி போட்டாக வேண்டும். தாமதித்துச் செல்லும்போது, கண்ணாடியின் ‘பவர்’ அதிகமாகிவிட வாய்ப்புள்ளது. இது எதிர்காலத்தில் பார்வையைப் பாதிக்கலாம். கண்ணின் இமையோரங்களில் நோய்த்தொற்று இருந்தாலும் நீர் வரலாம். குழந்தைகள் சுயசுத்தத்தை பராமரிக்காததாலும் சத்துக்குறைபாடு காரணமாகவும் இப்பிரச்சினை பெரும்பாலும் ஏற்படுகிறது. சிலருக்குக் கண் இமையோர முடி, கண்ணுக்கு உட்புறமாக வளைந்து விழிக்கோளத்தை உரசுவதன் மூலமும் நீர் வரும். இதையெல்லாம் ஒரு கண்மருத்துவர் கண்டறிந்து, உரிய சிகிச்சையைத் தர முடியும்.

மின்னணு சாதனங்களும் கண்ணீரும்


தொலைக்காட்சியில் வைத்த கண் வாங்காமல் நிகழ்ச்சிகளை நீண்டநேரம் பார்க்கும்போது, குழந்தைகள் நீண்டநேரம் வீடியோ கேம்ஸ், மொபைல் கேம்ஸ் விளையாடும்போதும் கண் விரைவாகக் களைத்துப் போய்விடும். இன்றைக்கு டாப்லெட் கணினியிலோ, கைப்பேசியிலோ முகநூல், இணையதளங்களைப் பலரும் மேய்ந்துகொண்டே இருக்கிறார்கள். போதாக்குறைக்கு இப்போது வாட்ஸ்அப் வேறு வந்துவிட்டது. நேரங்காலம் தெரியாமல் நள்ளிரவு 12, 1 மணிவரையிலும், மீண்டும் அதிகாலை 4, 5 மணிக்கெல்லாம் வாட்ஸ்அப்பில் மூழ்கிவிடுகிறார்கள். கண்ணுக்கு நாம் தரும் இதுபோன்ற அதிகப்படியான வேலைப்பளு தொடர் நெருக்கடியால் கண்ணிலிருந்து நீர் வடியலாம்.

சிலர் கண்ணில் நீர் வடிந்தால் உடனே சொட்டுமருந்து வாங்கிப் போடுவார்கள். நீர்வடிதலுக்குக் காரணம், ஒருவேளை கண்ணில் இருக்கும் சிறு தூசியாகக்கூட இருக்கலாம். தூசி இருப்பதை எல்லா நேரமும் கண்டறிந்துவிட முடியாது. இந்தத் தூசி மேல் இமையின் உட்புறத்திலோ அல்லது கருவிழியிலோ ஒட்டியிருக்கக்கூடும். சொட்டுமருந்து போடுவதன் மூலம் தூசி வெளியேற வாய்ப்பில்லை.


அந்தத் தூசியைக் கண்ணுக்குப் பாதிப்பின்றிக் கண்மருத்துவரால் மட்டுமே எடுக்கமுடியும். அதை விடுத்துச் சுயமாகச் சொட்டுமருந்தைப் போட்டுக்கொண்டே இருந்தால், தூசி வெளியேறாமல் கருவிழியில் புண் ஏற்பட்டுப் பிரச்சினை மோசமடையவும் சாத்தியம் உண்டு. இது தவிரக் கண்ணில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சினைகளாலும் நீர் வடியலாம்.

அறுவைசிகிச்சையும் நீர்வடிதலும்

கண்புரை, கண்நீர் அழுத்த உயர்வு, மாறுகண் என்று பலவிதக் காரணங்களுக்காகக் கண்ணில் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் அறுவைக்குப் பின் நாள்பட்ட நிலையில் கண்ணிலிருந்து நீர் வடிய வாய்ப்பு உண்டு. நோய்த்தொற்றோ அல்லது அறுவைக்குப் போடப்பட்ட தையலின் எச்சங்களோ இருந்தாலும் நீர் வடியலாம்.

கண்ணீர்ப்பை பிரச்சினைகள்

கண்ணிலிருந்து உற்பத்தியாகும் நீர், மேல்-கீழ் இமைகளில் உள்ள சிறிய திறப்புகள் வழியாக வெளியேறி நீர்ப்பையை அடைகிறது. இந்த நீர் செல்லும் பாதையான கண்ணீர் நாளக்குழாயில் எங்கேயாவது தடங்கல் ஏற்பட்டாலும் அல்லது நீர்ப்பையில் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் நீர் வடியலாம். மருந்தின் மூலமோ அல்லது பிரச்சினைக்கேற்பவோ அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.


மற்றக் காரணங்கள்

அதிக ஒளியைப் பார்த்தாலும் சிலருக்குக் கண்ணீர் அதிகமாக வரலாம். தரமான குளிர்க்கண்ணாடி (Sun Glass) அணிவதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம். அதேபோல வெல்டிங் போன்ற அதிக வெப்பம், அதிக ஒளியில் தொடர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், அதற்குரிய பாதுகாப்புக் கண்ணாடியை அணிந்துதான் வேலை செய்ய வேண்டும். இது கண்ணை அதிக வெப்பத்திலிருந்து பாதுகாத்து நீர்வடிதலை கட்டுப்படுத்துவதுடன், நாளடைவில் கண்ணின் கருவிழி கெட்டுப்போகாமலும் பாதுகாக்கிறது.

சிலருக்குப் பயம் காரணமாகக் கண்ணீர் வரும். இன்னும் சிலருக்கு எந்தக் காரணமும் இன்றி கண்ணீர் வந்துகொண்டேயிருக்கும். அவர்கள் தீவிர மனச்சோர்வு / மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருக்கலாம். முறையான கவுன்சலிங் மூலம் அவர்களை ஆற்றுப்படுத்திக் கண்ணீர் வருவதை நிறுத்தலாம்.

whats app group1

whats app group 2

whats app group 3