10-ஆம் வகுப்பு தேர்வு நேரம் திடீரென கால் மணி நேரம் குறைத்து தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதுபோல் பிளஸ் 2 தேர்வர்களுக்கும் அரை மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 10, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் ரேங்க் முறையை தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பாடப்பிரிவுகளில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.
இந்நிலையில் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு நேரத்தை கால் மணி நேரமாக குறைத்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கமாக அவர்களுக்கு 3 மணி நேரத்திற்கு பதில் அடுத்த ஆண்டு முதல் 2.45 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 10ம் வகுப்பு மொழித் தேர்வுகள் காலைக்குப் பதில் பிற்பகலுக்கு மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி வரும் மார்ச் 14-ஆம் தேதி தமிழ் முதல் தாள் தொடங்குகிறது. அந்த தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. அதில் 2.10 மணி வரை கேள்வித்தாளை படிப்பதற்கும் 2.10 முதல் 2.15 மணி வரை தேர்வர் விவரங்களை நிரப்புவதற்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதன்பின்னர் 02.15 மணிக்கு தேர்வு தொடங்கி 04.45 மணிக்கு முடிகிறது. அதுபோல் காலை வேளைகளில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. அதில் 10.10 மணி வரை கேள்வித்தாளை படிப்பதற்கும் 10.10 முதல் 10.15 மணி வரை தேர்வர் விவரங்களை நிரப்புவதற்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பின்னர் தேர்வு 10.15 மணிக்கு தொடங்கி 12.45 மணிக்கு முடிவடைகிறது.
அதுபோல் பிளஸ் 2 தேர்வர்களுக்கும் அரை மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 மணிக்கு தொடங்கும் தேர்வில் 10 நிமிடங்கள் கேள்வித் தாளை படிப்பதற்கும் 5 நிமிடங்கள் தேர்வர் விவரங்களை நிரப்புவதற்கும் வழங்கப்படுகிறது. பின்னர் 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி 12.45 மணிக்கு முடிவடைகிறது.
இதே நேரம் பிளஸ் 1 தேர்வுக்கும் பொருந்தும்.
source: oneindia.com

Whats App Group link