கலவரத்தில் ஈடுபடுவோரை விரட்டியடிப்பதற்காக, உயிருக்கு ஆபத்தை விளைவிக்காத, புதிய ரக துப்பாக்கியைத் தயாரித்துள்ளார் கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞர்.
கும்பகோணத்தைச் சேர்ந்த சரவணன், ரஷ்யாவில் உள்ள உக்ரைன் பல்கலைக்கழகத்தில் ஏவியானிக்ஸ் என்ஜினியரிங் படிப்பு பயின்றுள்ளார். படித்தபின் வெளிநாட்டு பணிகளுக்குச் செல்லாமல், நமது தாயகத்திற்காக புதிய புதிய அறிவியல்பூர்வமான, பயனுள்ள கருவிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதில் ஒன்று, கலவரத்தை உயிரிழப்பின்றி கட்டுப்படுத்தும் துப்பாக்கி.
உருளைக்கிழங்கு, களிமண் உருண்டை ஆகியவற்றை இட்டு சுட்டால் கலவரக்காரர்களுக்கு காயம் ஏற்படாமல் பெரும் வலியை மட்டும் ஏற்படுத்தும் என்கிறார் சரவணன். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் தாக்கத்தில் இந்த துப்பாக்கியை வடிவமைத்ததாகக் கூறும் சரவணன், மேலும் பல கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார். சிறு வயது முதலே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்ததால், மிகுந்த பொருட்செலவில் அவரை ரஷ்யாவில் படிக்க வைத்ததாக கூறுகிறார் சரவணனின் தந்தை.
வைகை அணை நீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மாகோல் வைத்து மூட முயற்சி நடைபெற்றதை பலர் கேலி, கிண்டல் செய்ததாகவும் ஆனால் அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்ட தன்னிடம் திட்டம் உள்ளதாகவும் சரவணன் கூறியுள்ளார்.
25 கண்டுபிடிப்புகளுக்கு தன்னிடம் ஃபார்முலா உள்ளதாகவும், நிதிவசதி இல்லாததால் அவற்றை செயல்படுத்த முடியவில்லை என்று வேதனை தெரிவித்தார். தான் வடிவமைத்த துப்பாக்கி, ஆயுத வகையில் வருவதால், காவல்துறை மூலமாக அரசிடம் சமர்ப்பிக்க உள்ளதாக சரவணன் கூறினார். வெளிநாட்டு வேலைகளைத் தேர்வு செய்யும் இளைஞர்களுக்கு மத்தியில் கும்பகோணம் சரவணன் ஒரு பாடமாகத் திகழ்கிறார்.