பிளஸ் 1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 28,000 மாணவர்களை மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றிய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அரசுத்தேர்வுத் துறை இயக்ககம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.
கடந்த 2018 மார்ச் மாதம் நடந்த பிளஸ் 1 பொதுத்தேர்வை பள்ளிகள் மூலம் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவர்கள் எழுதினர். தேர்ச்சி விகிதம்91.3% ஆகும். சுமார்75 ஆயிரம் பேர் தோல்வியுற்றனர். வழக்கமாக பிளஸ் 1 வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் தொடர்ந்து பிளஸ் 2 வகுப்புக்கு செல்லலாம். தோல்வியுற்ற பாடங்களை மட்டும் வரும்ஜூன் மாத சிறப்புத் தேர்வு அல்லது பிளஸ் 2 வகுப்பு இறுதித்தேர்வின்போது சேர்த்து எழுதிக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் 2019ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டு பிளஸ் 1 தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கைக்கும், வரும் 2019 பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் பெரிய அளவு வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 29,000 பேர் குறைந்துள்ளளது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இதுகுறித்து விசாரிக்கையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் 28,167 மாணவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் வழங்கி கட்டாயமாக வெளியேற்றியது தெரிய வந்தது. பிளஸ் 2 தேர்வில் 100% தேர்ச்சிக்காக தனியார் பள்ளிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பாக அனுப்பிய சுற்றறிக்கையில், 'இந்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர்கள் பதில் அளிப்பதோடு, நீக்கப்பட்ட மாணவர்களை பள்ளி மாணவர்களாகவே அவர்களை பிளஸ் 2 தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,இந்தத் தகவலை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் வரும் ஜனவரி 5ம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.