பொதுத் தேர்வை எதிர் கொள்ளும் சென்னை மாநகராட்சி பள்ளி
மாணவர்களுக்கு ₹1.69 கோடி மதிப்பீட்டில் 6 வகை சுண்டல் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளியில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்விற்கு தயாராக மாலையில் 4 மணி முதல் 6 மணி சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். அந்த வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு அனைவருக்கும் மாநகராட்சி சார்பில் கருப்புக் கடலை, வெள்ளை கடலை, பச்சை பட்டாணி, வெள்ளை பட்டாணி, வேர் கடலை, கருப்புக் கடலை என்று 6 வகையான சுண்டல் வழங்கப்படும்.
அதன்படி இந்தாண்டு மாணவர்களுக்கு சுண்டல் வழங்க ₹1.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் உள்ள 70 மாநகராட்சி பள்ளிகளில் இந்தாண்டு 10 ம் வகுப்பில் 6267 மாணவர்களும், 11 ம் வகுப்பில் 5201 மாணவர்களும், 12 ம் வகுப்பில் 5077 மாணவர்களும் படித்து வருகின்றனர்.
இதன்படி பார்த்தால் மொத்தம் 16 ஆயிரத்து 545 மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகளில் கலந்து கொள்வார்கள்.
அந்த மாணவர்களுக்கு வாரத்தின் ஆறு நாட்களுக்கு ஆறு வகையான சுண்டல் வழங்கப்படும். இதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 142 நாட்களுக்கும், 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 119 நாட்களுக்கும் சுண்டல் வழங்கப்படும்.இதற்காக ஒரு மாணவனுக்கு நாள் ஒன்றுக்கு ₹8 செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதன்படி பார்த்தால் மார்ச் மாதம் வரையில் 16,545 மாணவர்களுக்கு சுண்டல் வழங்க ₹1.69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தபட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் தங்களது தேவையான பொருட்களை அவர்களே திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு நகர்புற கூட்டுறவு சங்கத்தில் இருந்து கொள்முதல் செய்து பள்ளிகளிலேயே சுண்டல் தயாரித்து வழங்குவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.