அவசர காலங்களில் தொடர்பு கொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அவசரகாலங்களில் தொடர்பு கொள்வதற்குப் புதிய செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தனித்தனியாகப் பல அவசரகால கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் பலத்துறைகளின் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. காவல்துறைக்கு 100, தீயணைப்புத்துறைக்கு 101 ஆகிய எண்கள் வழக்கத்தில் இருந்து வருகின்றன.
ஆனால் அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளில் அனைத்து உதவிகளுக்கும் ஒரே பொதுவான எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
அது போன்ற வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தும் விதமாக 112 என்ற எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறை இரண்டு தினங்களுக்கு முன்னால் ஹிமாச்சலப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் 112 இந்தியா என்ற புதிய செயலியையும் அறிமுகப்படுத்தி பேசினார்.
அப்போது 'இந்த செயலிலியில் ஷவுட் (shout) என்ற வசதி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் பிரச்சனையில் சிக்கும் பெண்கள் அருகில் உள்ள அவசர உதவி மையத்தை அணுகி உதவி பெறலாம்.'
இந்த செயலியின் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது