அரசு ஊழியர், ஆசிரியர்கள் செவ்வாய்க்கிழமை (டிச. 4) முதல் தொடங்க இருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளனர்.

வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) நிர்வாகிகள் போராட்டத்தை ஒத்தி வைப்பதாகத் தெரிவித்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, அரசு ஊழியர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளைக் களைவது என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர், செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
இதுதொடர்பாக, அரசுத் தரப்பில் சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்படாததால், போராட்டம் கண்டிப்பாக நடைபெறும் என அறிவித்தனர்.
இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்துக்குத் தடை விதிக்குமாறு வழக்குரைஞர் லோகநாதன் சார்பில் வழக்குரைஞர் செல்வம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார்.
மனு விவரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். டிசம்பர் 10 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் தொடங்க உள்ளன.
மேலும், பல்வேறு துறை அரசு ஊழியர்கள், கஜா புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போராட்டத்தால் மாணவர்கள் மற்றும் புயல் பாதித்த பகுதி மக்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுவர். மேலும், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் விதிப்படி, அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட அனுமதியில்லை. எனவே, ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, ஜாக்டோ - ஜியோ அமைப்பின் வழக்குரைஞர் வாதிடுகையில், இதுகுறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார். சூழ்நிலையின் அவசரம் கருதி, இந்த வழக்கை பிற்பகல் 1 மணிக்கு நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.
அப்போது, இதுதொடர்பாக ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதில் அளித்து வாதிட்ட அரசு தரப்பு வழக்குரைஞர், நீதிமன்ற உத்தரவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை வரும் திங்கள்கிழமை (டிச.10) விரிவாகத் தாக்கல் செய்வதாகத் தெரிவித்தார். இதையடுத்து, டிச.10 வரை ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தங்களின் போராட்டத்தைத் தள்ளி வைக்க முடியுமா என நீதிபதிகள் கேட்டனர்.
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து முடிவு செய்வதாக அமைப்பின் வழக்குரைஞர் கூறியதையடுத்து, வழக்கை பிற்பகல் 1.30 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றத்தின் வேண்டுகோளை ஏற்று, வரும் திங்கள்கிழமை (டிச.10) வரை போராட்டத்தை ஒத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் வழக்கில் இதுவரை பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலர் டிச.10 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த அமைக்கப்பட்ட ஸ்ரீதர் குழுவின் அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை டிச.10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Whats App Group link