ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்த வேலைநிறுத்த போராட்டம் மீண்டும்
ஒத்திவைக்கப்பட்டது. வேலைநிறுத்த போராட்டத்தை ஜன.7ம் தேதி வரை மீண்டும் ஒத்திவைத்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
ஜாக்டோ - ஜியோ விவகாரம்
தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல், முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், பணியாளர்கள் பல்வேறு துறைகளில் உள்ள தொழில் நுட்ப ஊழியர்கள், ஊர்து ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல், உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில ஆண்டுகளாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக அரசு எந்தவித பேச்சுவார்த்தைக்கும் அழைக்காததால், டிசம்பர் 4-ம் தேதியில் இருந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பு அறிவித்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் 30-ம் தேதி பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்தது.
வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு
அரைநாள் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் திட்டமிட்டபடி ஜாக்டோ-ஜியோ டிசம்பர் 4-ம் தேதி காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்குவதாக இருந்தது. இதனையடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
கஜா புயல் பாதிப்பு, பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் வேளை போன்றவை இந்த போராட்டத்தால் பாதிக்கப்படும் என்ற சூழல் உருவாகியுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கை அவசர வழக்காக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் யோசனையை ஏற்று வேலை நிறுத்தத்தை டிசம்பர் 10-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்புகளின் நிர்வாகிகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல் தெரிவித்துள்ளனர்.
வேலைநிறுத்தப் போராட்டம் மீண்டும் ஒத்திவைப்பு
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்டோ - ஜியோ விவகாரம் தொடர்பாக இதுவரை தொடுக்கப்பட்ட வழக்குகளில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தமிழக அரசின் வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது,'தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஸ்ரீதர் ஆணையத்தின் அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட்டு உள்ளது, அதன்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?..
இந்த விவரங்களை எல்லாம் சிலீட்ட கவரில் வைத்து இரு வாரங்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து வேலைநிறுத்த போராட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்ற வளாகத்தில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறினர். இதனிடையே டிச.10- ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்ட போராட்டம் ஜன.7 வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.