பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, மழைக் காலம் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்த, பள்ளி கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மழை பெய்யும் நாட்களில், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற எதிர்பார்ப்பு, பெற்றோர்ருக்கும், மாணவர்களுக்கும், தற்போது அதிகரித்துள்ளது.
சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், 10 செ.மீ.,க்கு மேல் மழை பெய்தாலும், வழக்கம் போல பள்ளி, கல்லுாரிகள் இயங்குகின்றன.ஆனால், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில், சிறு துாறல் விழுந்தாலே, பள்ளிக்கு விடுமுறை கேட்டு, சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகின்றனர்.
இந்த பருவ மழை காலத்தில் மட்டும், சாதாரண துாறலுக்கு விடுமுறை அறிவித்து, மூன்று நாட்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பள்ளிகள் தரப்பில், அரசுக்கு புகார் அளித்ததால், மழைக்கால விடுமுறைக்கு என, விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மழை குறித்த விழிப்புணர்வை, பெற்றோருக்கும், மாணவர்களுக்கும், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மன நல ஆலோசகர்கள், சுற்றுச்சூழல் அறிஞர்கள் வாயிலாக, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, பள்ளிக் கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.
மழையின் அவசியம், மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவம், மழைக் காலங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், குழந்தைகள் மற்றும் மாணவர்களை, மழை காலங்களில், பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்து, பெற்றோருக்கு விளக்க உள்ளனர்.
தேவையற்ற விடுமுறைகளால், பாடங்கள் பாதிக்கப்படுவது குறித்தும், விளக்கப்பட உள்ளது. மாவட்ட வாரியாக, பள்ளி தலைமை ஆசிரியர்களின் விருப்பப்படி, நிகழ்ச்சிகளை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.மழைக் காலங்களில், பள்ளிகளுக்கு செல்லும் வழியிலோ, பள்ளியிலோ பிரச்னைகள் இருந்தால், அதை உள்ளாட்சி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும், பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட உள்ளது.