''பயோமெட்ரிக் முறையில், பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும்,
பெற்றோருக்கு குறுஞ்செய்தி சென்றுவிடும். பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசினார்.
ஈரோடு மாவட்டம், கோபி மற்றும் நம்பியூரில், நான்கு பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பினர், 1,303 பேருக்கு, இலவச சைக்கிள்களை வழங்கி, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:ஜன., மாதம் முதல் வாரத்தில், மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்க வாய்ப்புள்ளது. புதிய ஸ்மார்ட் கார்டு மூலம், நீங்கள் இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும், அதன் மூலம், பள்ளி மாற்று சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
ஸ்மார்ட் கார்டில் உள்ள சிம்கார்டை உபயோகித்தால், மாணவனின் சரித்திரமே, அந்த பள்ளிக்கு தெரிய வரும்.பயோ மெட்ரிக் முறையாக, பள்ளிக்குள் மாணவன் நுழைந்ததும், அதுகுறித்து பெற்றோருக்கு, குறுஞ்செய்தி சென்றுவிடும். பள்ளிகளில் இனிமேல் வருகைப்பதிவேடு தேவையில்லை. 'உள்ளேன் ஐயா' என்பதே, வகுப்பறையில் இனி தேவைஇல்லை. மாணவன் பள்ளிக்குள் நுழையும் போதே, அனைத்து விபரங்களும் பதிவாகி விடும். எங்களுக்கும், லேப் டாப் வேண்டும் என ஆசிரியர்கள் கேட்கின்றனர்.
இதுகுறித்து, மத்திய அரசிடம் பேசி வருகிறோம். ஆசிரியர்களுக்கும், லேப் டாப் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.ஆறு முதல், எட்டாம் வகுப்பினருக்கு டேப் வழங்கப்படும். இதன் மூலம், இரு மொழிகளில் கற்றுத்தரப்படும். கம்ப்யூட்டர் ஆசிரியர்களில், 7,500 பேரில், 800 பேரை நியமிக்க, அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
பின், நிருபர்களிடம், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:பொதுத்தேர்வுக்கான மையங்கள் குறித்து நாளை அறிவிக்கப்படும்.
'கஜா' புயலால் பாதித்த மாவட்டங்களில், நடத்தப்படும் தேர்வை, மாற்றி அமைப்பதில், சிரமம் இருப்பதாக துறையினர் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், அதையும் அரசு பரிசீலித்து வருகிறது. 10 முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, பொதுத்தேர்வு உள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. ஆசிரியர் போராட்டம் குறித்து முதல்வரிடம் பேசி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்