பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

உரை:
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

பழமொழி:

Drawn wells seldom dry

இறைக்கிற ஊற்றே சுரக்கும்

பொன்மொழி:

தெளிந்த அறிவும் இடைவிடாத முயற்சியும் ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால் தொட்டதெல்லாம் துலங்கும்.

பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஆங்கில எண் 7-க்கு இணையான தமிழ் எண்?


2.ஆங்கில எண் 8-க்கு இணையான தமிழ் எண்?


நீதிக்கதை :

காவல்காரன்!

பஞ்சமி நாட்டின் மன்னர் பஞ்சோபகேசன். இவர் புதிதாக அமைத்த அழகிய தென்னந் தோப்பைக் காவல் காக்க, பொறுப்பான ஆள் தேவை. அந்த வேலையை யாரிடம் ஒப்படைக்கலாம் என யோசனை செய்தார். அப்போது அவனுக்கு, விவேகன் நினைவு வந்தது. அரசவை கோமாளியான அவன் அங்கும், இங்கும் சுற்றி வருகிறான். எந்த வேலையும் செய்வது இல்லை. அவனுக்கு இந்த வேலையை கொடுப்பது என்று முடிவு செய்தார்.

""இந்த நிலத்தில் தென்னங்கன்றுகள் நடப் போகிறோம். இவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு உன்னுடையது. இந்தக் கன்றுகளை இரவிலும், பகலிலும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக நடந்து கொள்,'' என்றார்.

""அரசே! நீங்கள் சொன்னது போலவே நடந்து கொள்வேன்,'' என்றான் விவேகன்.

அங்கே தென்னங்கன்றுகள் நடப்பட்டன. அவற்றிற்கு காவல் இருக்கத் தொடங்கினான் விவேகன்.

பகல் வேளையில், அவற்றைப் பார்த்துக் கொள்வது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. இரவு வந்தது. வீடு செல்ல வேண்டும். தென்னங்கன்றுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். என்ன செய்வது என்று சிந்தித்தான். நல்ல வழி ஒன்று அவனுக்குத் தோன்றியது.

தென்னங்கன்றுகளை எல்லாம் பிடுங்கி, ஒன்றாகக் கட்டினான். அவற்றைத் தூக்கி கொண்டு, தன் வீட்டிற்கு வந்தான். தன் கண் பார்வையிலேயே அவற்றை வைத்திருந்தான்.

பொழுது விடிந்தது. அந்தக் கன்றுகளைத் தூக்கிக் கொண்டு நிலத்திற்கு வந்தான். முன்பு இருந்தது போலவே அவற்றை நட்டு வைத்தான். பொழுது சாய்ந்ததும் அவற்றைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு, தன் வீட்டிற்குச் சென்றான். இப்படியே தொடர்ந்து நடந்து வந்தது.
ஒரு வாரம் சென்றது-

தென்னங்கன்றுகள் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக அரசர் அங்கு வந்தார்.

தென்னங்கன்றுகள் அனைத்தும் வாடிக்கிடப்பதைப் பார்த்தார்.

கோபம் கொண்ட அவர், ""நீ பொறுப்பாகத் தென்னந்தோப்பைக் காவல் காப்பாய் என்று உன் பொறுப்பில் விட்டேன். எல்லாக் கன்றுகளும் வாடிக் கிடக்கின்றன. என்ன செய்தாய்?'' என்று கத்தினார்.

""அரசே! நீங்கள்தான் இவற்றைப் பகலிலும், இரவிலும் நான் காவல் காக்க வேண்டும் என்றீர்கள். இரவில் நான் இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று பாதுகாத்தேன். பகலில் மீண்டும் இவற்றை இங்கே நட்டேன். நீங்கள் சொன்னது போலவே நடந்து கொண்டேன். இவை ஏன் வாடி விட்டன! என்று எனக்கும் தெரியவில்லை,'' என்றான்.

இதைக் கேட்ட அரசர், "இவனிடம் போய் இந்த வேலையை கொடுத்தோமே...' என்று தலையில் அடித்துக் கொண்டார்.

"அப்பாடா! தப்பித்தோம்!' என, பெருமூச்சு விட்டான் விவேகன்

கதை கருத்து: இதனை இவன் செய்வான் என்று அறிந்து அதனை அவன் கண் விட வேண்டும்.

இன்றைய செய்தி துளிகள் : 

1.இன்று முதல் நடைபெறுவதாக இருந்த ஜாக்டோ - ஜியோ போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

2.பிளஸ் 2 வரை பொது தேர்வு வினாத்தாள் தயார் : நுண்ணறிவு கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம்

3.கஜா புயல் நிவாரணத்திற்கு ரூ.1,401 கோடி ஒதுக்கீடு: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

4.ராஜபக்சே பிரதமராக செயல்பட தடை: இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

5.மும்பையில் நடைபெற்ற டாடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.

Whats App Group link