மாணவர்கள் குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்,கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட நீட் பயிற்சி மையங்களுக்கு அரசு சார்பில் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால், அரசு சார்பில் இருந்து ஒரு ரூபாய் கூட செலவு செய்யப்படவில்லை என்றும்,412 மையங்களிலும், தனியார் பங்களிப்பின் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும்தெரிவித்தார்.
மேலும், இறுதிக்கட்டத்தில் நீட் பயிற்சி மையங்கள் துவங்கப்பட்டதன் காரணமாகவே 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும், ஆனால் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்றும் கூறினார். மாணவர்கள் குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பது உண்மை தான். ஆசிரியர் நியமனம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆசிரியர்களை உடனடியாக நியமனம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.