கலாவுக்கு ஒரு பக்கம் வருத்தமாகவும் இன்னொரு பக்கம் சந்தோஷமாகவும் இருந்தது. ஸ்கூலுக்கு இனிமேல் பெண்கள் யாரும் கொலுசு அணிந்து வரக் கூடாது என்று அரசு சொல்லிவிட்டது. இனிமேல் அவள் வகுப்புத் தோழிகளின் கொலுசுச் சத்தம் கொலுசு இல்லாத அவளைச் சங்கடப்படுத்தாது.

ஆனால், கூடவே அம்மாவைக் கொஞ்சி, கெஞ்சி, சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து கொலுசு வாங்கிவிடலாம் என்ற கனவில் மண் விழுந்துவிட்டது.

அம்மாவுக்குச் சந்தோஷம். பரவாயில்லை அரசு இந்த மாதிரி தடை கொண்டுவந்தது நல்லதுதான். இப்போதைக்கு கலாவின் கனவை நிறைவேற்ற பணத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை.

சந்திராவின் அம்மா ஆசை ஆசையாக மல்லிகைச் செடி வளர்த்துவருகிறார். தினம் இரண்டு முழம் அளவுக்காவது பூ தேறிவிடும். அதை அடர்த்தியாகக் கட்டி, தான் கொஞ்சமும் சந்திராவுக்குக் கொஞ்சமும் வைப்பார்.

சந்திராவுக்கு மல்லிகைப் பூவைத் தினமும் வைத்துக்கொண்டு போகப் பிடிக்கவில்லை. அம்மாவிடம் சொன்னால் திட்டுவார்.

பூ வைக்கப் பள்ளிகளில் தடை வந்தது, சந்திராவுக்கு வசதியாகப் போயிற்று. சந்திரா சொன்னதைக் கேட்டு அம்மாவுக்கு வருத்தமாயிற்று.



பொம்பளைப் பிள்ளைங்க பூ வைப்பதுதான் மங்களகரம். அரசு வைக்கலாம்னு சொல்லுதா, வைக்க வேண்டாம்னு சொல்லுதான்னு புரியலை. அரசு இப்படி எல்லாம் தனி மனித சுதந்திரத்துல தலையிடக் கூடாது என சந்திராவின் அம்மாவுக்குத் தோன்றியது.

கையாளக் கற்றுத்தர வேண்டாமா?

பேதம் தெரியக் கூடாது என்பதற்காகவே பள்ளிகளில் சீருடை என்பது வைக்கப் பட்டுள்ளது. அதேபோல் பூ, கொலுசு மாதிரியான விஷயங்களில் அனைவருக் குமான ஒரு வரையறை உருவாக்குவது சரியான விஷயமாகக்கூட இருக்கலாம். ஆனால், அதற்குச் சொல்லப்படுகிற காரணம் தான், கேவலமாக இருக்கிறது.

மல்லிகைப்பூ வாசத்திலும் கொலுசுச் சத்தத்திலும் பையன்களுக்குக் கவனச் சிதறல் வந்துவிடுமாம். அதனால் கொலுசு அணியக் கூடாதாம்; பூ வைக்கக் கூடாதாம்.

இதே ரீதியில் போனால், பெண்களைப் பார்ப்பதால் ஆண்கள் மனம் சலனப்படும், அதனால் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்பார்களா? பெண்களைப் பார்க்க முடியாவிட்டால் என்ன? மொபைலிலும் டிவியிலும் சினிமாவிலும் பெண்களை ஆண்கள் பார்ப்பதில்லையா? அதில் வரும் ஆபாசமான காட்சிகளைத் தடுக்க, தணிக்கையைச் சரியான தளத்தில் அமலாக்கத் தயங்கும் அரசு ஏன் சின்னஞ்சிறு பெண்களின் நடை, உடை பாவனைகளில் விதிகளைக் கொண்டுவருகிறது?

பையன்களின் மனம் சலனப்படுகிறது என்றால் சலனத்தைக் கையாள, தன் வசத்தில் தன் வாழ்வைக் கையில் எடுப்பதை அல்லவா நாம் சொல்லித்தர வேண்டும்.

அபத்தத்தின் உச்சம்

அதேபோல் தொலைக்காட்சி, சினிமா, மொபைல் பயன்பாட்டில் இம்மாதிரியான காட்சிகள் காணக்கிடைப்பதில் எந்தவிதச் சீரமைப்புகளைக் கொண்டுவர வேண்டும் என்றல்லவா யோசிக்க வேண்டும். தொலைக்காட்சிகளில் வரும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வரும் பெண்கள் அணியும் உடைகளுக்கும் காட்சியமைப்புகளுக்கும் எந்தவிதத் தடையும் இருப்பதாகத் தெரியவில்லை.

கவர்ச்சிகரமான உடைகளில் தண்ணீருக்குள் மூழ்கி எழும்போது படங்கள் எடுப்பது, இறுக்கமான உடைகளை அணிந்தபடி பெண்கள் சேற்றில் புரள்வது, அந்தச் சேற்றை உடலின் அனைத்துப் பாகங்களிலும் இருந்து வழித்து பக்கெட்டில் நிரப்புவது போன்ற நிகழ்ச்சிகள் ஆபாசம் மட்டுமல்ல; அபத்தத்தின் உச்சம்.

குடும்பமாக உட்கார்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கக் கூசும் அளவுக்குத்தான் பெரும் பாலான நிகழ்ச்சிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இது குழந்தைகளின் மனத்தில் எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்குகிறது என்பதைக் குழந்தைகளின் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுள்ள அனைத்துப் பெரியவர்களும் உணரவேண்டும். தொலைக்காட்சியில், மொபைலில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள்; சலனப்படுகிறார்கள். பிம்பங்களாகப் பார்த்த வற்றை நிஜமாகப் பார்க்க விழைந்து பெண்களின் மேல் பாலியல் சீண்டல்களை, பலாத்காரத்தைச் செலுத்துகிறார்கள்.



இந்த நிகழ்ச்சிகளைத் தடுக்க அரசு எந்தவிதச் சட்ட திட்டங்களையும் போடு வதில்லை. சொல்லப்போனால், தணிக்கை விதிமுறைகளைச் சரிவரப் பயன்படுத்தினாலே இன்றைக்கு வரக்கூடிய சினிமாக்களில் பாதி விஷயங்கள் அடிபட்டுவிடும்.

ஏற்றப்பட்ட கற்பிதம்

இந்தப் பிரச்சினையை வேறு கோணத்திலும் அணுக வேண்டியுள்ளது. பெண்களுக்கு ஆடை, அணிகலன்கள் மேல் உள்ள ஆசை எப்படி வருகிறது? காலம் காலமாகப் பெண் என்பவள் அழகாக இருக்க வேண்டும் என்று ஆண், பெண் இருவர் மண்டைக்குள்ளும் ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

பூ, கொலுசு, வளையல், மூக்குத்தி, ஜிமிக்கி, பொட்டு, தோடு, சங்கிலி, மாலை, உடை என எல்லாவற்றிலும் அப்போதைய ஃபேஷனைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத் துக்குப் பெண்கள் தள்ளப் படுகிறார்கள். உன் ஆளுமைத் திறனால் கம்பீரமாக இருப்பதுதான் உண்மையான அழகு என்று யாரும் அவளுக்குச் சொல்லித் தருவதில்லை.

இயல்பாகவே இம்மாதிரி விஷயங்களில் கவனம் செலுத்தாத பெண்களைக்கூடச் சீண்டி, கிண்டல் அடித்து, ‘வழி’க்குக் கொண்டுவரப் பார்க்கின்றன சுற்றமும் தோழமையும்.



கற்பதே தீர்வு

ஆண்/பையன் கொலுசால், பூவால், இவற்றை அணிந்த பெண்ணால் கவரப் படுகிறான். பெண் இவற்றைப் பிரதானமாக நினைக்கும்படி வளர்க்கப்படுகிறாள்.

வளரிளம் பருவத்தில் இருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலியல் உணர்வுகளைக் கையாளக் கற்றுக் கொடுக்க வேண்டும். பெண்களின் உலகம் அலங்காரத்துக்கு மட்டுமானது அல்ல; ஆளுமைப் பண்புகளால் நிரப்பட வேண்டியது என்ற பார்வையை ஆணும் பெண்ணும், பெற்றோரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இன்றைக்கு முக்கியமாகத் தேவைப் படுவது வளரிளம் பருவத்தினருக்கான வாழ்க்கைத் திறன் கல்வி. பால் பேதங்களைப் புரிந்துகொள்ளப் பாலினம் (Gender) பற்றிய கல்வியும் மீடியாவைப் புரிந்துகொள்வதற்கான கல்வியும் தேவை. பாலியல் கல்வி குறித்த தவறான புரிதலால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இத்தகைய கல்விக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அவர்களும் பாலியல் சம்பந்தப்பட்டவை குறித்துப் பேசத் தெரியாமல் திணறுகிறார்கள். பிரச்சினை பெரியவர்களோடுதான்.

பாலியல் கல்வி என்பது உடல் உறவு கொள்வது பற்றி அல்ல. ஆண், பெண் உடற்கூறு பற்றி அறிதல், அந்தரங்க சுத்தம் உட்படத் தன் சுத்தம் பேணக் கற்றல், இனப்பெருக்க உடற்கூறு, பாலியல் உணர்வு - உறவு பற்றிப் புரிந்துகொள்ளுதல், பேச்சு, நடை, உடை, பாவனை, எதிர் பாலினரோடு சரியான தளத்தில் பழகுவது என எல்லாவற்றையும் பற்றி காரண காரியங்கள், பின் விளைவுகளோடு விளக்குவதும் அறிவுபூர்வமாக விஞ்ஞானபூர்வமாக உணரச் செய்வதும்.



மின் பிம்பங்கள் தரும் கவர்ச்சி மாயையில் இருந்து விடுபட அவற்றைத் தவிர்ப்பது சாத்தியப்படாதபோது அவற்றைச் சரிவரக் கையாளக் கற்பதுதான் சரியான தீர்வு. முதலில் அரசும் பெற்றோரும் பள்ளிகளும் இதை உணர்ந்து அதற்கேற்பச் செயல்பட முன்வந்தால்தான் வளரிளம் பருவத்தினரின் வாழ்வு ஆரோக்கியமானதாக இருக்கும்.

கட்டுரையாளர், எழுத்தாளர், செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com | ஓவியம்: அ. செல்வம்

Whats App Group link