குரூப்-1 தேர்வு முடிவு வெளியிடப்பட்டதில், சேலம் ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகள் சிந்துஜா 6வது ரேங்க் எடுத்து சாதனை படைத்தார். வீராணம் போலீஸ் எஸ்ஐ வரதராஜன், 38வது ரேங்க் பெற்றுள்ளார்.தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் ஆர்டிஓ, டிஎஸ்பி, தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட 85 காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்டது. 




முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு என நடத்தப்பட்டு இறுதியாக நேர்முக தேர்வுக்கு 176 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 19ம் தேதி முதல் 21ம் தேதி வரைஇ சென்னையில் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில், மாநில அளவில் 6வது இடத்தை, சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக உள்ள நடராஜனின் மகள் சிந்துஜா(24) பிடித்தார். பிஇ பட்டதாரியான இவர், தனது முயற்சியால் துணை கலெக்டராகியுள்ளார். இவரது தாயார் தனலட்சுமி. நாமக்கல் மாவட்டம் திருமலைப்பட்டி கிராமத்தை சொந்த ஊராக கொண்ட இவர், தனது தந்தையின் ஊக்கத்தால் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற முடிந்தது என்றார். 




 இதேபோல், சேலம் மாநகர் வீராணம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக பணியாற்றி வரும் வரதராஜன்(33), மாநில அளவில் 38வது இடம் பிடித்து தேர்வாகியுள்ளார். இவரது தந்தை பால்ராஜ். தாய் அமுதா. இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். 




எம்எஸ்சி பட்டதாரியான இவர், கடந்த 2011ம் ஆண்டு காவல்துறையில் நேரடி எஸ்ஐயாக தேர்வானார். தொடர்ந்து முயற்சித்து தற்போது குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வைத்திருந்த இடத்தில் தேர்வு முடிவு தெரிந்தவுடன், அங்கிருந்த துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Whats App Group link