தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தகுதியுள்ள தனித்தேர்வர்கள் திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 ஆம் தேதி முதல் மார்ச் 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித் தேர்வர்கள் ஜனவரி 7 ஆம் தேதி முதல் ஜனவரி 14 ஆம் தேதி மாலை 5 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு சேவை தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
நேரடித் தனித்தேர்வர்கள் அனைவரும் பகுதி- 1 மொழிப் பாடத்தில் தமிழ்மொழிப் பாடத்தை மட்டுமே முதல்மொழிப் பாடமாக கண்டிப்பாகத் தேர்வெழுதுதல் வேண்டும்.
கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் அறிந்து கொள்ளலாம்.