பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பல்வேறு ஊழியர் சங்கங்கள் எல்லாம் இணைந்து கடந்த 22-ம் தேதி தொடங்கிய வேலை நிறுத்தப் போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து, சாலை மறியல், முற்றுகை போராட்டங்களாக மாறி கைது நடவடிக்கைகள் வரை நடந்து வருகிறது.

இந்த நிலையில் அரசு பள்ளிகள் ஆசிரியர்கள் இல்லாமல் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கூறி வருகின்றனர். அதேசமயம் அரசு பேச்சுவார்த்தைகளில் உடன்பாடுகள் ஏற்படாத நிலையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் பல்வேறு அரசு ஊழியர்கள், பணியாளர்கள் சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் அனைத்துப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகும் தமிழக அரசு வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரியவில்லை.

இந்த நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு அனைவரும் பள்ளிக்கு செல்ல முடிவெடுத்துள்ளனர். ஆனால் குடியரசு தினம் முடிந்த பிறகு மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்கின்றனர் ஆசிரியர்கள். ஞாயிறு, விடுமுறை நாள் முடிவதற்குள் எங்கள் கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால் திங்கள் கிழமை முதல் மீண்டும் வேலை நிறுத்தம் தொடரும் என்றனர்