தமிழ்நாட்டில் பெரும்பாலான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் கிராமப் புறங்களில் அமைந்துள்ளன. தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்த வரை,
பெரும்பாலும் ஈராசிரியர் பள்ளிகளே அதிகம். இப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது.
சுமார் 8,000 க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளில் 25க்கும் குறைவான மாணவர்களே பயின்று வருகின்றனர்.
15 மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசு சார்பில், மாணவர்களுக்கு 14 வகையிலான இலவசத் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த திட்டங்களினால், மாணவர்கள் சேர்க்கையில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை என கூறப்படுகிறது.
*பத்தாண்டுகளுக்கு முன்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஒரு கோடி மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். தற்போது இது 56 லட்சமாக சரிந்துள்ளது.*
*பத்தாண்டுகளுக்கு முன்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமார் ஒரு கோடி மாணவ, மாணவிகள் பயின்று வந்தனர். தற்போது இது 56 லட்சமாக சரிந்துள்ளது.*
இவற்றிற்கு காரணம் பெற்றோரின் ஆங்கில மோகம், குக்கிராமங்களில் கூட புற்றீசல் போல முளைக்கும் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகள், ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகளில் 25 சதவீதம் ஏனழக் குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு, இந்த ஒதுக்கீட்டில் பயிலும் மாணவ, மாணவிகளுக்குக் காக, அரசே ஆங்கில வழிக் கல்வி பள்ளிகளுக்கு நிதி வழங்கும் நிலை என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
கிராமப்புறங்களில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளிகளில் சில ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வருவதில்லை. வந்தாலும் சரி வர பாடம் நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.
ஈராசிரியர் பள்ளிகளில், 5 வகுப்புகளையும் இரண்டு ஆசிரியர்களே கற்பிப்பதில் சிரமமான சூழ்நிலை நிலவுகிறது.
இதில் ஒரு ஆசிரியர் விடுப்பு எடுத்தாலோ, பயிற்சிக்கு சென்றாலோ ஒரே ஆசிரியரே 5 வகுப்புகளுக்கும் கற்பிக்க வேண்டிய நிலை உள்ளது.
இது தவிர, அரசு வழங்கும் விலையில்லா பொருள்களை பெற்று வழங்குதல், தலைமை ஆசிரியர் கூட்டத்தில் பங்கேற்றல், பள்ளி சார்பான வங்கிக் கணக்கை பராமரித்தல், பெண் கல்வி உதவித் தொகைக்கான சான்றுகள் பெறுதல், வட்டார மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க அழைத்துச் செல்லல், பள்ளிகளுக்கு வழங்கப்படும் மான்யத்தை பயன்படுத்துதல் போன்ற பல்வேறு காரணங்களால் தலைமை ஆசிரியர், பள்ளி வேலை நேரத்தில் வெளியே செல்ல நேரிடுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப் படுகிறது.
இது மட்டுமின்றி தொடக்கப் பள்ளிகளில் 70 க்கும் மேற்பட்ட பதிவேடுகளை பராமரித்தல், ஊதியப் பட்டியல் தயாரித்தல், மாதாந்திர அறிக்கை தயாரித்தல், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம், கிராம கல்விக் குழு கூட்டம், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், அன்னையர் கழகம் இவற்றிற்கு ஏற்பாடு செய்தல் போன்ற பணிகளையும் தலைமை ஆசிரியரே செய்ய வேண்டிய நிலையில் உள்ளார். இதனாலும் மாணவர்கள் கல்வி பாதிக்கப் படுகிறது.
மேலும் கல்வித்துறையின் எமிஸ் இணையதளத்தில், பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி கட்டமைப்பு சார்ந்த பல்வேறு விவரங்களை பதிவேற்றம் செய்தல், பள்ளி சுத்தம், சுகாதாரம் தொடர்பான விவரங்களை மத்திய அரசின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தல் போன்ற பணிகளையும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களே மேற்கொள்கின்றனர். இதனாலும் மாணவர்களின் கல்வி முன்னேற்ற நிலையில் தேக்கம் ஏற்படுகிறது.
குறிப்பாக ஈராசிரியர் பள்ளிகளில் தலைமை ஆசிரியரே கற்பித்தல் பணியையும் செய்து கொண்டு, பிற பணிகளையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
எனவே, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அருகில் உள்ள உயர் நிலைப் பள்ளிகளுடன் இணைப்பதால், தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணிச் சுமை குறையும்.
ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆசிரியர் என்ற நிலை ஏற்படும்.
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி தவிர, பிற பணிகள் இருக்காது என்பதால் முழு நேரமும் கற்பித்தல் பணியில் ஈடுபட முடியும். இதனால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும். பள்ளிகள் ஒருங்கிணைக்கப் படுவதால், ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு வரும் நிலை ஏற்படும்.
பள்ளி கட்டமைப்பு, மாணவர்கள் விவரம் மற்றும் ஆசிரியர்கள் விவரங்கள் போன்றவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்ய, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஏதேனும் ஒரு ஆசிரியர் விடுப்பு எடுத்தாலும், வேறு ஒரு ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க முடியும்.
மேற்கண்ட காரணங்களால் தான் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் அருகில் உள்ள உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளோடு இணைக்கப் பட உள்ளதாக கூறப்படுகிறது.