அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைப் போன்றே இஸ்ரோவின் வழியும் தனிவழி.

உலகின் சில முன்னணி நாடுகளைப் போலவே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இஸ்ரோ. அதற்கான சோதனை முயற்சியில் விலங்குகளுக்கு பதிலாக மனித ரோபோக்களை அனுப்பலாம் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

'ககன்யான் மிஷன்' திட்டத்தின் கீழ் இந்திய பயணிகளை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் தீவிரமாக இருப்பதாக இந்திய அரசும் இஸ்ரோவும் தெளிவாக கூறியிருக்கின்றன.

2021ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

பிபிசியிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், "விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சோதனை முயற்சிகள் சிக்கலான செயல்முறைகளை உள்ளடக்கியவை. அதில், பலவீனமான விலங்குகளை பயன்படுத்தும் எண்ணம் இஸ்ரோவிடம் இல்லை" என்று தெரிவித்தார்.

ஆனால், இதற்கு முன் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியிருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மனிதர்களை அனுப்புவதற்கு முன்பு, சோதனை முயற்சியாக விலங்குகளையே அனுப்பிய நிலையில், இஸ்ரோ ஏன் ரோபோவை அனுப்ப முடிவு செய்திருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

இதுகுறித்து, இஸ்ரோ தலைவர் சிவனிடம் பிபிசி கேட்டபோது, "இந்தியா சரியான முயற்சியையே மேற்கொள்கிறது," என்று அவர் உறுதியுடன் பதிலளித்தார்.

"அமெரிக்காவும் ரஷ்யாவும் விலங்குகளை விண்வெளிக்கு அனுப்பி வைத்தபோது, தற்போது இருக்கும் நவீன தொழில்நுட்பங்கள் இருக்கவில்லை, அப்போது, மனித ரோபோக்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, விலங்குகளின் உயிரை பணயம் வைத்து அந்த சோதனைகளை நடத்தினார்கள். ஆனால் தற்போது, நம்மிடம் மேம்பட்ட உணர்திறன் கருவிகள் (சென்சார்கள்), நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. காலத்திற்கு ஏற்றவாறு தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த முடிவு செய்திருக்கிறோம்."

நிலவில் தாவரம் முளைத்தது - வரலாற்றில் முதல் முறை
விண்வெளியிலிருந்து வரும் மர்ம சிக்னலுக்கு காரணம் வேற்றுக்கிரக வாசிகளா?
'ககன்யான் மிஷன்' திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னதாக, இஸ்ரோ இரண்டு முன்னோட்ட சோதனைகளை மேற்கொள்ள வேண்டும், அதில் மனிதனைப் போல வடிவமைக்கப்பட்டுள்ள ரோபோ பயன்படுத்தப்படும்.

ஆனால் விலங்குகளை இந்த சோதனையில் ஈடுபடுத்துவது ஆபத்தானது என நினைக்க காரணம் என்ன? சோதனைக்கு பிறகு மனிதர்கள்தானே விண்வெளிக்கு அனுப்பப்பட வேண்டும்? ஒரு உயிரினத்திற்கும் ரோபோக்கும் வித்தியாசம் உள்ளதே?

அறிவியல் துறை நிபுணரான பல்லவ பாக்லாவின் கருத்துப்படி, "ககன்யான் திட்டத்தின் கீழ், இஸ்ரோ நேரடியாக மனிதனை அனுப்ப முடிவு செய்தால், அதற்கு முன்னதாக வேறு இரண்டு சோதனைகளை செய்யவேண்டும். கரியமில வாயு, வெப்பம், ஈரப்பதம், விபத்து போன்றவற்றை உணரும் திறன் கொண்ட உயிரினத்தை அனுப்புவதற்கு பதிலாக, இந்த உணர்வுகளை உணரும்படி, சென்சார்கள் பொருத்தப்பட்ட மனித ரோபோவை அனுப்பலாம். என்னைப் பொருத்தவரையில் இது மிகவும் ஆபத்தானது என்றே சொல்வேன். ஏனென்றால், இதுவரை உயிரினங்களே வசித்திராத விண்வெளிக்கு விண்கலனை அனுப்பவிருக்கிறது என்ற நிலையில் ஆபத்தும் அதற்கு ஏற்றவாறு அதிகமாகவே இருக்கும்".

மறுபுறம், ககன்யான் திட்டம் துரிதகதியில் முன்னேற்றம் அடைந்துவருவதாக இஸ்ரோ கூறுகிறது. இந்த ஆண்டு இறுதிவாக்கில் விண்வெளிக்கு செல்லும் வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி நிறைவடைந்துவிடும்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தத் திட்டத்தில் ஆபத்து அதிகம் இருக்கிறதே என்று இஸ்ரோ தலைவர் சிவனிடம் பிபிசி கேட்டக் கேள்விக்கு, "இதற்கு முன்பு விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்திய விண்வெளி வீரர்களின் உயிருக்கு ஆபத்து இருந்ததில்லையா," என்று எதிர்கேள்வி கேட்கிறார்.

விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் - என்ன நடக்கிறது?
நிலவில் தாவரம் முளைத்தது - வரலாற்றில் முதல் முறை
இந்தியாவின் இந்த லட்சிய பணிக்கான செலவு சுமார் 10,000 கோடி ரூபாயாக இருக்கும் என்றும், அதற்கு அரசு ஒப்புக்கொண்டிருப்பதாகவும் அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

2018ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, இந்தத் திட்டத்தை அறிவித்தார்.

"இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றவேண்டும் என்ற அழுத்தம் இஸ்ரோ மற்றும் அமைச்சகத்திற்கு சற்று கூடுதலாகவே உள்ளது" என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சில உயர் அதிகாரிகள் கருதுகின்றனர்.

இஸ்ரோ தலைவர் சிவனின் கருத்துப்படி, "ககன்யான் திட்டத்திற்கான முயற்சிகள் பல கட்டங்களை கடந்துவிட்டன; விண்கலன் செலுத்து மையம் (Spacefield Center) அமைக்கப்பட்டுவிட்டது. 2020 டிசம்பர் மாதத்திற்குள் ஆளில்லா முதல் விண்கலனும், 2021, ஜூலை மாதத்திற்குள் ஆளில்லா இரண்டாவது விண்கலனும் விண்வெளிக்கு செலுத்தப்படும். அதன்பிறகு, மனிதர்கள் பயணிக்கும் இந்தியாவின் முதல் விண்கலன் 2021 டிசம்பர் மாதத்திற்குள் விண்வெளிக்கு அனுப்பப்படும்.

இந்தத் திட்டம் வெற்றியடைந்துவிட்டால், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துவிடும்.

ஐம்பதுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்னரே, முதன்முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பியது சோவியத் யூனியனாக இருந்த தற்போதைய ரஷ்யா. சோவியத் யூனியனை தொடர்ந்து இரண்டாவதாக அந்த சாதனையை செய்த நாடு அமெரிக்கா.

இந்த இரண்டு நாடுகளுமே, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்னர் விலங்குகளை சோதனை முயற்சியாக அனுப்பின. சோதனை முயற்சிகள் வெற்றி பெற்ற பிறகே, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பின.

இந்த இரண்டு நாடுகளைத் தொடர்ந்து, 2003ஆம் ஆண்டில் சீனா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தது.

"பெரும்பாலான நாடுகள் தங்கள் விண்வெளிப் பயணிகளைப் பற்றிய தகவல்களை ரகசியமாக வைக்கின்றன. உதாரணமாக, 2003இல் சீனாவின் முதல் விண்வெளி வீரர், விண்வெளி பயணத்தில் இருந்து திரும்பியபோது, அவர் உடலில் ரத்தக்கசிவு இருந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின."இதுபோன்ற முயற்சிகளில் அதிக அளவு அபாயம் இருப்பதை மறுக்க முடியாது என்று வேறு சில நிபுணர்களும் கூறுகின்றனர்.

இந்திய அறிவியல் கழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆர்.கே. சின்ஹா இவ்வாறு கூறுகிறார்: "பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் இதுவரையில் இந்த முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் இந்தியா பத்து ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது."

"இந்த முயற்சியின் இலக்கு மிகப் பெரியது என்பதும், இதில் பல அபாயங்கள் இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக இஸ்ரோ என்ன சொல்கிறதோ, அதை நிறைவேற்றிக் காட்டிவிடும்" என்று முத்தாப்பாய் கூறுகிறார் அறிவியல் துறை நிபுணர் பல்லவ் பாக்லா.

Whats App Group link