உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாகவும் வேறு எங்கும் இல்லை, இங்குள்ள சென்னை உயர் நீதிமன்றம் தான். உலகின் முதலாவது பெரிய நீதிமன்றமாக லண்டன், பெய்லி நீதிமன்றம் உள்ளது. இந்தியாவில் முதல் பெரிய உயர் நீதிமன்றமாகவும் சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது. சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அதன் சிறப்பை உயர்த்துவதில் முக்கிய இடமாக விளங்குகின்றது.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சுமார் நூறாண்டுகளுக்கு முன்பாகவே, நீதிமன்றங்களை பிரிட்டிஷ் அரசு இந்தியாவில் நிறுவியது. அப்படி நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் ஒன்றுதான் சென்னை உயர்நீதி மன்றம். மற்ற இரண்டு நீதிமன்றங்களில் ஒன்று மும்பையிலும், மற்றொன்று கொல்கத்தாவிலும் நிறுவப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் 1862 ஜுன் 26ல் சென்னை இராஜதானி நகரத்திற்கு விக்டோரியா பேரரசியின் அரசாட்சியில் வழங்கப்பட்ட காப்புரிமையின்படி நிறுவப்பட்டது. இதன் நீதிபரிபாலணை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கியது.
தொடக்கத்தில், 'சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்' என்றுதான் அழைக்கப்பட்டது. அதன் பின்னர், உயர் நீதிமன்ற சட்ட வரைவுகள் ஏற்படுத்தப்பட்டு, 1862 ஆகஸ்ட் 15-ம் நாள் முதல் 'மெட்ராஸ் ஹை கோர்ட்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போதைய சென்னை உயர் நீதிமன்றக் கட்டடத்துக்கு முன் கொய்யா தோப்பு என்ற இடத்தில் சென்னை உயர் நீதிமன்றம் இயங்கிவந்தது. பிரிட்டிஷ் நீதிபதி ஹாலி ஹார்மன் உயர் நீதிமன்றத்துக்கு தனிக் கட்டடம் வேண்டும் என்று எழுப்பிய கோரிக்கையை ஏற்று, விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பின்பே, தற்போதைய உயர் நீதிமன்றக் கட்டடம் கட்டப்பட்டது.
1996 ஆம் ஆண்டு மதராசு என்பது சென்னை என்று சட்டப்பூர்வமாக பெயர் மாற்றம் கண்டபொழுது உயர்நீதிமன்றம் அதிலிருந்து விலக்கு பெற்று அதன் பாரம்பரியப் பெருமைக்காக மெட்ராஸ் (Madras High Court) என்றே வழங்கப்பட்டுவந்தது. 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றம் என்று மாற்ற நடுவண் அரசு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இந்தோ-சார்சியனிக் முறையில் 1888-ஆம் ஆண்டு ஜே.டபிள்யூ.பிராஸிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1892ல் என்றி இர்வின் அறிவுரைப்படி கட்டப்பட்டு முடிக்கப்பட்டது. இதன் கட்டுமானம் செப்டம்பர் 22, 1914 இல் முதல் உலகப் போரின் துவக்கத்தின்போது ஜெர்மனின் SMS எம்டன் போர்க்கப்பலின் தாக்குதலினால் சேதமடைந்தது. உயர் நீதிமன்றக் கட்டடத்தை அமைப்பதற்கு அப்போது ஆன செலவு 13 லட்ச ரூபாய். உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாகவும், இந்தியாவின் முதல் பெரிய உயர் நீதிமன்றமாகவும் சென்னை உயர் நீதிமன்றம் திகழ்கிறது
அழகாக வண்ணம் தீட்டப்பட்ட கட்டிடத்தின் கூரைகளும் வண்ணக் கண்ணாடிகள் பொதிந்த கதவுகளும் கலைவண்ணத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு கடல் மட்டத்திலிருந்து 175 அடி உயரத்தில் மிக உயரமான மாடகோபுரத்தில் கலங்கரை விளக்கு செயல்பட்டு வந்தது. சரியான பராமரிப்பின்றியும் மெரினாக் கடற்கரையில் புதிய கலங்கரை விளக்கு அமைக்கப்பட்டதாலும் தற்போது இது செயல்படாத நிலையில் உள்ளது. இந்த நீதிமன்றத்தை 9.45 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டு, 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய் செலவில் பணி முடிக்கப்பட்டது.
தந்தை பெரியார் மீது இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தடுப்புக் காவல் சட்டத்தை எதிர்த்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நடத்திய வழக்கு, நேருவுக்குக் கறுப்புக் கொடி காட்டியதற்காக அண்ணாதுரை மீது தொடரப்பட்ட வழக்கு, தமிழ்த் திரை உலகில் புகழ்பெற்ற தியாகராஜ பாகவதர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் மீதான லட்சுமிகாந்தன் கொலைவழக்கு ஆகியவை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற சில முக்கிய வழக்குகளாகும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..