தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தி இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.



நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசின் இடைக்கால பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பட்ஜெட் உரையாற்றினார்.
இதில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார்.
முன்னதாக தனிநபர் வருமான வரி விலக்குப் பெறுவதற்கான உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாக இருந்தது. இது தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்த அறிவிப்பை வெளியிட்டதும், நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பலத்த வரவேற்பு தெரிவித்தனர்.
இதன் மூலம் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை இருப்பவர்கள் இனி வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.
வருமான வரி விலக்கு உயர்வால் சுமார் 3 கோடி நடுத்தரக் குடும்பத்தினர் பயனடைவார்கள்.
மேலும், வீட்டுக்கடனுக்கான வட்டிச் சலுகை இனி 2 வீடுகளுக்கு வழங்கப்படும். அதாவது, முதல் வீடு வாங்கும் போது வீட்டுக் கடனுக்கு வழங்கப்பட்டது போலவே, இனி இரண்டாவது வீடு வாங்கும் போதும் வட்டிச் சலுகைக் கிடைக்கும்.

வங்கி மற்றும் அஞ்சலகங்களில் செய்யப்படும் முதலீடுகள் மூலம் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு இனி வரிப்பிடித்தம் இல்லை.
தனி நபரின் ஆண்டு வருமானத்தில் இருந்து நிரந்தர கழிவு ரூ.40 ஆயிரத்தில் இருந்து இனி ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
வாடகை மூலம் கிடைக்கும் ஆண்டு வருவாய்க்கான வரிவிலக்கு உச்ச வரம்பு இதுவரை ரூ.1.80 லட்சமாக இருந்த நிலையில் இது தற்போது ரூ.2.40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வகைகளில், வரிச் சலுகைகள் அறிவித்திருப்பதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்


Whats App Group link