ஈரோடு மாவட்டம் கோபி தாலுகா அலுவலகத்தில் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

 இதில் 1 லட்சம் குழந்தைகள் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 மேலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் வண்ண சீருடைகள் வழங்கப்பட உள்ளது.

பிளஸ்-2 படிக்கும் மற்றும் படித்து முடித்த 15 லட்சத்து 40 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்பட இருக்கிறது.

8, 9, 10-ம் வகுப்புகளில் படிக்கும் 13 லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் மடிக்கணினி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களாக இருந்தாலும் அதை ஆய்வு செய்து அந்த பள்ளிக்கட்டிடங்களின் ஸ்திரத்தன்மை குறித்து சான்று வழங்குவது மாநில அரசின் பொறுப்பாகும்.

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சில ஆசிரியர்கள் மீது வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு உள்துறை பொறுப்பில் உள்ளது. எனவே இதுகுறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறி னார்.