அமேசான் நிறுவனம் தனது மொபைல் அப்ளிகேஷனில் புது விதமான விளம்பரங்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் இந்தியாவில் மிக அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் இணைய வர்த்தக நிறுவனங்களில் ஒன்று.

 இந்நிறுவனம் தற்போது தனது மொபைல் அப்ளிகேஷனில் புதிய முறையில் விளம்பரங்களுக்கு இடம் அளிக்க உள்ளது எனத் தகவல் கிடைத்துள்ளது.

இதற்காக ஐபோன்களுக்கான அமேசான் அப்ளிகேஷனில் சோதனை செய்துவருகிறது.

 விரைவில் ஆண்ட்ராய்டு போன்களுக்கான அப்ளிகேஷனிலும் இந்த சோதனையை விரிவு செய்யும் எனத் தெரிகிறது.

இத்திட்டத்தின் முக்கியமான அம்சம் வீடியோ விளம்பரங்களை அமேசான் அப்ளிகேஷனில் இடம்பெறச் செய்வது.

 ஒரு வாடிக்கையாளர் ஏதேனும் ஒரு பொருளை அமேசான் ஆப்பில் தேடினால் அதற்கான முடிவுகளுக்கு மத்தியில் விளம்பரங்களும் இடம்பெறும்.
ஏற்கெனவே பேஸ்புக் பதிவுகளுக்கு இடையில் விளம்பரங்களை அனுமதித்துள்ளது.

 கூகுள் நிறுவனம் தனது யூடியூப் வீடியோக்களில் விளம்பரங்களை அனுமதித்துள்ளது. இதே ஐடியாவை அமேசானும் பின்பற்ற உள்ளது.

கூகுள், பேஸ்புக் நிறுவனங்களின் வருவாய் வீடியோ விளம்பரங்கள் மூலம்தான் அதிகமாக கிடைக்கின்றன.

 அமேசான் நிறுவனத்தின் இத்திட்டத்தினால் அந்த நிறுவனங்களின் விளம்பர வருவாய் வீழ்ச்சி அடையக்கூடும்.

அமெரிக்காவில் 50% இணைய வர்த்தகத்தை தன்வசப்படுத்தியுள்ள அமேசான் நிறுவனம் வேகமாக வளர்ந்துவரும் டிஜிட்டல் விளம்பரங்களுக்கான தளமாக மாறியுள்ளது.

 இத்துறையில் அமேசான் நிறுவனத்தின் பங்கு 8.8% ஆக வளர்ச்சி அடையும் எனவும் முதலிடத்தில் உள்ள கூகுள் நிறுவனத்தின் (யூடியூப்) பங்கு 37.2% ஆக சரியும் எனவும் ஈ-மார்க்கெட்டர் கணிப்பு தெரிவிக்கிறது.