.

புதுக்கோட்டை,மார்ச்.20: தமிழகத்தில் புதியதாக தொடங்கப்படவுள்ள கல்வித் தொலைக்காட்சி மூலம் அரசுப் பள்ளிகள் அபரிவிதமான வளர்ச்சி அடையும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறினார்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த கல்வி அலுவலக கட்டிடத்தில் கல்வி தொலைக்காட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளருக்கான கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் கல்வித் தொலைக்காட்சியை ஏற்படுத்தி 24 மணி நேரமும் மாணவர்களின் வளர்ச்சிக்கு ஒரு அரசாங்கம் வழங்குவதென்பது வரவேற்கத்தக்கது.இக்கல்வித் தொலைக்காட்சியானது பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் வழிகாட்டலுடன்,பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்  தலைமையில் ஆரம்பப் பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கல்வித் தொலைக்காட்சி அலுவலகம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது தளத்தில் செயல்பட உள்ளது.24 மணி நேரமும் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளன.முதற்கட்டமாக  17 வகையான எட்டுமணிநேர நிகழ்ச்சிகள் தயாராகி வருகின்றன.மாணவர்கள் பகல் நேரங்களில் பள்ளியில் இருப்பதால் முக்கியமான பாடங்கள் பற்றிய நிகழ்ச்சிகள் மாலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை ஒளிபரப்பாகும்.இதற்கு மாவட்ட அளவில் ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதில்  முழுக்க முழுக்க சிறந்த பாட ஆசிரியர்களைக் கொண்டு நிகழ்ச்சிகள் தயார் செய்து ஒளிபரப்பாக இருக்கின்றன.தினமும் ஒரு திருக்குறள் பற்றி விளக்கவுரையுடன் வழங்கப்படும் குறளின் குரல்,நல்லாசிரியர்கள் ,கல்வியாளர்கள்,கல்வி அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கும் குருவே துணை,சாதனை படைக்கும் கிராமப்புற மாணவர்களைக் கண்டு ஊக்கப்படுத்தும் சுட்டி கெட்டி,தினமும் ஒரு சிறந்த பள்ளியைப் பற்றிய மணியோசை,நீட் தேர்வு தொடர்பான வழிகாட்டல் நிகழ்ச்சியான ஏணிப்படிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்ப உள்ளது.குறிப்பாக அரசுப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.தமிழக அரசு கேபிள் நிறுவனம் வழியாக 200 வது சேனலாக கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்படும்.இதன் மூலம் அரசுப் பள்ளிகள் வளர்ச்சி அடையும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்,வட்டார கல்வி அலுவலர்கள்,வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்,கல்வி தொலைக்காட்சி மேலாளர் சதீஷ்குமார் ,மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் முனியசாமி மற்றும் பாடவாரியான ஆசிரியர் குழுவினர்கள், ஒன்றிய ஊடக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here