பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை மாற்றி வரையறை செய்து  தமிழக அரசு  அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக அரசு  செவ்வாய்க்கிழமை  வெளியிட்ட அரசாணை விவரம்:
அகில இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் விதிமுறைப்படி,  வரும் கல்வி ஆண்டில் (2019-2020) பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான குறைந்தபட்ச தகுதி  மதிப்பெண் மாற்றியமைக்கப்படுகிறது. அதில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்குக் குறைந்தபட்ச மதிப்பெண் 35 சதவீதத்திலிருந்து 40  சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கு 50 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாகவும், இதரப் பிரிவினர் அனைவருக்கும் 40 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பட்டியலினப்  பிரிவினருக்கான மதிப்பெண் தகுதி  உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில், பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அதில்  குறிப்பிடப்பட்டுள்ளது.
காரணம்  என்ன?: கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பொதுப் பிரிவினர் 50 சதவீதத்துக்குக் கூடுதலான மதிப்பெண்ணையும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 45 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் 40 சதவீத மதிப்பெண்ணையும், பட்டியலினத்தவர் 35 சதவீத மதிப்பெண்ணையும் பெற்றிருந்தால் பொறியியல்  படிப்பில் சேர முடியும் என்ற நிலை இருந்தது. 
இதனிடையே, கடந்த 2011-12-இல் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில், பொறியியல் படிப்பில் சேருவதற்கான மதிப்பெண் முறையினை மாற்றி அமைத்தது.அந்த மாற்றத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலும்,  உச்சநீதிமன்றத்திலும் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றங்கள், அவற்றை  தள்ளுபடி செய்தன. இந்நிலையில், அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் நிர்ணயித்த மதிப்பெண் முறையை ஏற்க வேண்டுமென  மாநில அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. 
அதை ஏற்றுக்கொண்ட  தமிழக அரசு,  வரும் கல்வி ஆண்டிலிருந்து  பொறியியல் படிப்பிற்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை நிர்ணயித்து தற்போது அரசாணை பிறப்பித்துள்ளது. தகுதி மதிப்பெண்கள் மாற்றியமைக்கப்பட்டிருப்பதால், வரும் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும்  சரிவைச் சந்திக்கும் என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here