பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள்:157
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
உரை:
தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.
பழமொழி :
Bend the twig, bend the tree
ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?
பொன்மொழி:
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.
-அடால்ஃப் ஹிட்லர்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது அறிவு :
1.தமிழகத்தில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது?
காரைக்குடி
2.தமிழக அரசின் தொல்லியல் அகல்வாய்வகம் எங்குள்ளது?
வேலூர்
நீதிக்கதை :
நன்றி மறந்த சிங்கம்


முல்லை மலர் என்ற காட்டில் விறகு வெட்டுவதற்காக சென்று கொண்டிருந்தான் மனிதன் ஒருவன்.
அப்போது காட்டில் எங்கிருந்தோ சிங்கத்தின் கர்ஜினை கேட்டது. பயத்துடன் ஓடத் தொடங்கினான் மனிதன்.
"மனிதனே பயப்படாதே! இங்கே வா! நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்ற குரல் கேட்டது.
தயக்கத்துடன் குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான் மனிதன்.
அங்கு ஒரு கூண்டில் சிங்கம் அடைப்பட்டு இருந்தது. வேட்டைக்காரர்கள் சிலர் சிங்கத்தை உயிருடன் பிடிப்பதற்காக ஒரு கூண்டு செய்து அதற்குள் ஓர் ஆட்டை விட்டு வைத்திருந்தனர். ஆட்டிற்கு ஆசைப்பட்ட சிங்கம் கூண்டிற்குள் மாட்டிக் கொண்டது.
மனிதனைப் பார்த்த சிங்கம், “மனிதனே, என்னை இந்தக் கூண்டிலிருந்து விடுவித்து விடு... நான் உனக்குப் பல உதவிகளைச் செய்வேன்,'' என்றது.
"நீயோ மனிதர்களைக் கொன்று தின்பவன். உன்னை எப்படி நான் விடுவிக்க முடியும்?'' என்றான் மனிதன்.
"மனிதர்களைக் கொல்லும் சுபாவம் எங்களுக்கு உண்டு தான். அதற்காக உயிர்காக்கும் உன்னைக் கூடவா அடித்துக் கொன்றுவிடுவேன். அவ்வளவு நன்றியில்லாதவனா நான்? பயப்படாமல் கூண்டின் கதவைத்திற. உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்'' என்று நைசாகப் பேசியது சிங்கம்.
சிங்கத்தின் வார்த்தையை உண்மையென்று நம்பிவிட்டான் மனிதன். கூண்டின் கதவைத் திறந்தான். அவ்வளவுதான்! நன்றி கெட்ட சிங்கம் மனிதன் மேல் பாய்வதற்கு தயாராயிற்று.
இதனைக் கண்ட மனிதன், “சிங்கமே, நீ செய்வது உனக்கே நியாயமா? உன்
பேச்சை நம்பி உன்னைக் கூண்டிலிருந்து விடுவித்தேனே... அதற்கு இதுதானா நீ காட்டும் நன்றி'' என்றான்.
"என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். அதை நீ எவ்வாறு நம்பலாம்? மனிதர்கள் என்றால் பகுத்தறிவுள்ளவர்கள் என்று தானே பொருள். அந்த அறிவைக் கொண்டு இது நல்லது, இது கெட்டது என்று பகுதித்தறிய வேண்டாமா? முட்டாள்தனமான உன் செய்கைக்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்?'' என்றது சிங்கம்.
"கடவுள் உன்னை தண்டிப்பார். உன் உயிரை காப்பாற்றிய என்னையே சாப்பிடுவது நியாயமா? உன்னை விடுவித்ததற்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல'' என்றான் மனிதன்.
அம்மோது அவ்வழியாக ஒரு நரி வந்தது.
"இதனிடம் நியாயம் கேட்போம்'' என்று கூறிய மனிதன் நடந்த
கதையனைத்தையும் நரியிடம் கூறினான்.
"எங்கள் தொழில் அனைவரையும் அடித்துக் கொன்று சாப்பிடுவதுதான். இது இவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும் கூட என்னைக் கூண்டிலிருந்து விடுவித்தான். முட்டாள்தனமான இந்தச் செய்கைக்கு உரிய பலனை இவன் அனுபவித்தே தீர வேண்டும். நீ என்ன சொல்ற நரியாரே...'' என்றது.
அனைத்தையும் கேட்ட நரிக்கு சிங்கத்தின் நன்றி கெட்ட செயல் புரிந்து
 விட்டது. உதவி செய்த மனிதனைக் காப்பற்றி சிங்கத்தை கூட்டில் பூட்டிவிட தந்திரமாக செயல் பட்டது. அதனால் ஒன்றும் புரியாததைப் போல் பாவனை செய்து.
"நீங்கள் இந்த மாதிரி சொன்னால் எனக்கு ஒன்றுமே புரியல. ஆரம்பத்திலிருந்து சொல்லுங்கள்'' என்றது நரி.
உடனே சிங்கம் சொல்லத் தொடங்கியது.
"நான் அந்தக் கூண்டிற்குள் அடைந்து கிடந்தேன்...''
"எந்தக் கூண்டிற்குள்?'' என்றது நரி.
"அதோ இருக்கிறதே அந்தக் கூண்டிற்குள்'' என்றது சிங்கம்.
"எப்படி அடைந்து கிடந்தீர்கள்?'' என்றது நரி.
சிங்கம் விடுவிடுவென்று கூண்டிற்குள் சென்றது. இதுதான் சமயம் என்று கருதிய நரி சட்டென்று கூண்டுக் கதவை இழுத்து மூடியது.
"நரியாரே! இது என்ன அயோக்கியத்தனம்! நியாயம் கூறுவதாகக் கூறி என்னை மறுபடியும் கூண்டில் அடைத்துவிட்டீரே!'' என்று கத்தியது சிங்கம்.
"நீங்கள் பேசாமல் கூண்டிற்குள்ளேயே இருங்கள். நான் ஒன்றும் இந்த மனிதனைப் போல் முட்டாள் அல்ல. உங்களுக்குச் சாதகமாக நியாயம் சொன்னால் முதலில் மனிதனை அடித்துக் கொல்வீர்கள். பிறகு என்னையே அடித்துக் கொன்று விடுவீர்கள். அதனால் தான் உங்களைக் கூண்டிற்குள் செல்லுமாறு செய்து கதவைப் பூட்டி விட்டேன்'' என்றது நரி.
நன்றி மறந்த சிங்கம் தான் செய்த தவறை எண்ணி வருந்தியது.
நீதி: ஒருவர் செய்த உதவியை எப்போதும் மறக்ககூடாது.
இன்றைய செய்தி துளிகள்:
1.மாணவர்களுக்கான முழுநேர இலவச நீட் பயிற்சி வகுப்புகள்: மாநிலம் முழுவதும் 11 மையங்களில் இன்று முதல் தொடங்குகிறது.
2.தேர்தல் பணிக்கு வர மறுக்கும் அலுவலர்கள்மற்றும் பணியில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை
3.அனைத்துப் பள்ளிகளிலும் கல்வித் தொலைக்காட்சியை காண ஏற்பாடு: குழந்தைகளைக் கவர அனிமேஷன் திருக்குறள்
4.ஜூன் 3 முதல் இலவச பாடநூல் விநியோகம்: புதிய பாடத் திட்டப் பணிகள் நிறைவு
5.ஐபிஎல் டி20 போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி