புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ள நிலையில், புதிய பாட நூல்களை அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும் முன்னரே அவை இ-புக்ஸாக வெளியாகி உள்ளது. இது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகளுக்கான புதிய பாடத்திட்டமானது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் அந்தந்த பாடங்கள் சார்ந்த நிபுணர்களைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. பிளஸ் 1 வகுப்புக்கு கடந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக புதிய நூல்கள் வெளியிடப்பட்டன
வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்புக்கான புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இவை அச்சிடப்பட்டு மே மாதத்தில் பள்ளிகளுக்கு அனுப்பப்படும்
இ-புக்ஸ்களாக tnscert.org இணையதளத்திலும் வெளியிடப்படும். தற்போது வரை, பிளஸ் 2 வகுப்புக்கான புதிய பாட நூல்கள் வெளியிடப்படவில்லை
ஆனால், புதிய பாடத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாட நூல்கள் இ-புக்ஸ்களாக ரகசியமாக சில தனியார் பள்ளிகளுக்கு பகிரப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, ஆங்கில வழிக் கல்விக்கான பாட நூல்களே இ-புக்ஸ்களாக வெளிவந்துள்ளன
அதில், இயற்பியல், கணினி அறிவியல், கணிதம், உயிரி தாவரவியல், உயிரி- விலங்கியல் என உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடங்களின் முதல் தொகுதி வெளியிடப்பட்டுள்ளன
அத்துடன் எஸ்எஸ்எல்சி வகுப்புக்கான பாடங்களும் இ-புக்ஸில் வெளிவந்துள்ளன. ஒருபடி மேலாக, சில பள்ளிகள், புதிய பாடத்திட்டத்தில் வெளியான பாடங்களுக்கு வழிகாட்டி நூல்களையும் வெளியிட்டுள்ளன
புதிய பாட நூல்களை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே, அவை வெளியாகி இருப்பது, கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது
பள்ளி மாணவர்கள் உயர்கல்வி செல்ல பிளஸ் 2 வகுப்பில் பெறும் மதிப்பெண் மிக முக்கியமானதாக இருக்கிறது
எனவே, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு வணிகரீதியான முக்கியத்துவம் கிடைக்கிறது. இதற்காக, சில பள்ளிகள் சில குறுக்கு வழிகளையும் நாடிச் செல்கின்றன
அதுபோன்ற பள்ளிகளால்தான், தற்போது இ-புக்ஸ்கள் வெளியாகிஉள்ளன. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காவிடில், எதிர்காலத்தில் தேர்வு வினாத்தாள்களும் முன்கூட்டியே வெளியாவதை தடுக்க முடியாமல் போய்விடும்
முன்கூட்டியே வெளியிடலாம்
வரும் கல்வியாண்டில், மாணவர்கள் புதிய பாடத்தில் பாடங்களை படிக்க வேண்டிய நிலை உள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வினால், அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்
பிளஸ் 2 நூல்களை உடனடியாக வெளியிட்டால், அரசுப் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையைப் பயன்படுத்தி முன்கூட்டியே ஓரளவாவது பாடங்களைப் படித்து புரிந்து கொள்ள முடியும்
எனவே, பிளஸ் 2 பாட நூல்கள் தயாராகி விட்டால், அதை தாமதிக்காமல் வெளியிடுவதற்கு பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்
இவ்விவகாரம் தொடர்பாக போலீஸில் புகார் அளிக்க பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..