அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு வரும் ஜூன் மாதம் 20-ஆம் தேதி தொடங்குகிறது என தமிழக அரசின் உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
பொறியியல் கலந்தாய்வை இதுவரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்த கல்வியாண்டு (2019-20) தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் ஆன்-லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கு 2-ஆவது ஆண்டாக ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்காக தமிழகத்தில் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதவி மையங்கள் மூலமாகவும், மாணவர்கள் வீட்டிலிருந்தபடியும் கலந்தாய்வின் மூலம் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்தநிலையில் பொறியியல் படிப்புகளுக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும், கலந்தாய்வு நடைபெறும் நாள் போன்ற விவரங்கள் குறித்து உயர்கல்வித் துறை ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 2-ஆம் தேதி தொடங்கி மே 31-ஆம் தேதி வரை கலந்தாய்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜூன் 3-ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது. அரசு அமைத்துள்ள உதவி மையங்களில் ஜூன் 6 முதல் 11-ஆம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
ஜூன் 17-ஆம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் மாதம் 20-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஜூன் 20, 21, 22 ஆகிய தேதிகளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டுப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மேலும் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதள முகவரி திங்கள்கிழமை அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here