தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் உருவாக்கிய செயற்கைக்கோள் ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பயிலும் 15 மாணவிகள் இணைந்து சென்னை ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்றனர். இதைத் தொடர்ந்து, கூட்டு முயற்சியுடன் இந்தச் செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது. ஆசியாவிலேயே முதல்முறையாக முற்றிலும் மாணவிகளே உருவாக்கிய செயற்கைக்கோள் இது. இதற்கு, எஸ்.கே.ஐ. என்.எஸ்.எல்.வி. 9 மணியம்மையார் சாட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை பகல் 11.30 மணியளவில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனில் இந்தச் செயற்கைக்கோள் இணைக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் 1.03 லட்சம் அடி உயரம் வரை சென்றது. பின்னர், வெப்பநிலை காரணமாக உருமாற்றம் பெற்று, பாராசூட் உதவியுடன் பறக்கத் தொடங்கியது. அதில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டிருந்ததால், இச்செயற்கைக்கோள் செல்லும் உயரம், திசை குறித்து பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாணவிகள் கண்காணித்தனர்.
பின்னர், இச்செயற்கைக்கோள் பிற்பகலில் கரந்தை அருகே சுங்கான்திடலில் தரை இறங்கியது. இந்தச் செயற்கைக்கோள் மேல் நோக்கிச் செல்லும்போதும், தரை இறங்கும்போதும், அதிலுள்ள கேமராவின் உதவியுடன் வான்வெளியில் உள்ள வளிமண்டலத்தின் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், அங்குள்ள வாயுக்களின் தன்மை நிலை குறித்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. பதிவான காட்சிகளை வைத்து மாணவிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், "இச்செயற்கைக்கோளில் சமிக்ஞைகள் மூலமாக பல தகவல்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், டெலிமெட்ரி மூலம் சமிக்ஞைகள், அட்சரேகை, உயரம், திசை வேகம், வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மைக்ரோ கன்ட்ரோலர் மூலமாகவும், ரேடியோ மூலமாகவும் தரவுகள் சேமிக்கப்பட்டுள்ளன. இதில், என்னென்ன காட்சிகள் பதிவாகி இருக்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளோம்' என்றனர்.
இந்தச் சாதனையை ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பதிவு செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் விண்வெளி விஞ்ஞானியும், இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..