2019-2020 கல்வியாண்டு துவங்கும்போது அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளா என்பதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்  என்று பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கை

அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரசால் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளை எழுத இயலாத நிலைஏற்படும்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டம் 2009ஐ மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தும் மாவட்ட தொடர்பு அலுவலர்களாக முதன்மைக்கல்வி அலுவலர்கள் உள்ள நிலையில் சட்டத்தினை மீறி அங்கீகாரமற்ற பள்ளிகள் இயங்கி வருவது முதன்மை கல்வி அலுவலர்கள் அவர்தம் பணியினை சரிவர செய்யவில்லை என்பதையே குறிக்கும்

மாவட்ட கல்வி அலுவலர்கள் அவரவர் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஒவ்வொரு அரசு உதவிபெறும், பகுதி நிதி உதவிபெறும், அரசு உதவி பெறாத உயர்நிலை மேல்நிலை பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற வாரியங்களில் இணைப்பு பெற்ற பள்ளிகள் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு நேரில் சென்று அங்கீகார ஆணையினைக் கோரி பெற வேண்டும்

அங்கீகார ஆணையை முன்னிலைப்படுத்த பள்ளிகளின் பட்டியலை தயார் செய்து முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்

அப்பட்டியிலின் முடிவில் கீழ்க்குறிப்பிட்டுள்ள சான்றினை வட்டாரக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் வழங்க வேண்டும். மேற்படி நடைமுறைகள் அனைத்தும் 23ம் தேதி முடிவடைய வேண்டும்

அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் சார்ந்த  விவரத்தினை அந்தந்த பகுதி பொதுமக்கள் அறியும் வண்ணம் பத்திரிகையில் செய்தி வெளியிட வேண்டும்.  பள்ளிகளின் முகப்பிலும் இத் தகவலை ஒட்ட வேண்டும்

இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் தெரிவித்து ஆலோசனை பெற வேண்டும். அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பள்ளி வாரியாக அறிக்கையினை வரும் மே 29ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்

அங்கீகாரமற்ற பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் வட்டார அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு பள்ளிக்கல்வி வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது