மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின்(சிபிஎஸ்இ) கீழ் செயல்படும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை நுண்கலைக் கல்வியை  அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக நடத்த வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள பாடத்திட்டத்துடன் புதிய மற்றும் நவீன பாடத்திட்டங்களை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் விளையாட்டுக் கல்வியை கட்டாயமாக்கி கடந்த வாரம் உத்தரவிட்டது சிபிஎஸ்இ

இந்நிலையில், இசை, நடனம், நாடகம், காட்சி மற்றும் சமையலறை சார்ந்த நுண்கலைகளை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இதற்கான பாடத்திட்டத்தை  அந்தந்த பள்ளிகளே சொந்தமாக வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது

இதற்கென முறையாக தேர்வு எதுவும் நடத்த வேண்டியதில்லை, மாறாக செய்முறைகள், எழுத்து மற்றும் திட்டப் பணிகள் மாணவர்களுக்கு கொடுத்து அதன் மூலம் அவர்களின் திறனை மதிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

பாடப்புத்தகங்களை தாண்டி பல்வேறு விஷயங்களை மாணவர்கள் கற்க வேண்டும் என்ற அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை நுண்கலைக் கல்வியை வரும் கல்வி ஆண்டு முதல் அமல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் அனைத்து பள்ளி மாணவர்களும் ஒருங்கிணைந்த கலையை தெரிந்து கொள்ள முடியும்

சிபிஎஸ்இ வாரியத்தில் இணைப்பு பெற்றுள்ள பள்ளிகள் அனைத்தும் அடிப்படை கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்க புதிய கற்றல்முறைகளை சிபிஎஸ்இ விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும்