நிகழாண்டில் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 345 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்படி, மதுரை, திருநெல்வேலியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு 195 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றும், புதிதாக அமையவுள்ள கரூர் மருத்துவக் கல்லூரிக்கு 150 இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது.
இதற்காக மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் ஏற்கெனவே விண்ணப்பித்திருந்ததாகவும், அதற்கான ஆய்வுப் பணிகளை மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் தற்போது 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும் நிகழாண்டு முதல் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர கரூரில் புதிதாக மருத்துவக் கல்லூரி ஒன்று இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இதனால் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு நிலவரப்படி, பெருந்துறை கல்லூரியிலும் சேர்த்து 3,000 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்தன. அவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்டன. பெருந்துறை கல்லூரியைப் பொருத்தவரை மொத்தம் 100 இடங்கள் அங்கு உள்ளன.
ஏற்கெனவே அங்கு இருந்த நடைமுறைப்படி, 30 இடங்கள் சாலைப் போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்காகவும், 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காகவும் அளிக்கப்பட்டது போக மீதமுள்ள 55 இடங்களுக்கு பொது கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
இதனிடையே, நிகழாண்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் 95 இடங்களையும், திருநெல்வேலி கல்லூரியில் 100 இடங்களையும் அதிகரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் விண்ணப்பித்திருந்தது. கரூர் கல்லூரிக்கு 150 இடங்களை அளிக்குமாறு அனுமதி கோரப்பட்டது.
அதன்பேரில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். விரைவில் இடங்களை அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய மருத்துவக் கவுன்சில் அளிக்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் நிகழாண்டில் 345 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here