பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்குப் பிறகு தொடங்கப்படும். விண்ணப்பப் பதிவு மே முதல் வாரத்தில் தொடங்கும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
2019-20-ஆம் கல்வியாண்டு பொறியியல் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இல்லத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இதில், இம்முறை கலந்தாய்வை நடத்த உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக்குப் பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி:
2019-20-ஆம் கல்வியாண்டு பொறியியல் ஆன்-லைன் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன.
எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்குப் பிறகு, பொறியியல் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வு தொடங்கப்படும். இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டைப் போலவே, மே முதல் வாரத்தில் தொடங்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. தேதிகள் இறுதி செய்யப்பட்டதும், அதிகாரப்பூர்வமாக ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்.
பொறியியல் கல்விக் கட்டணத்தை பொருத்தவரை மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. இருந்தபோதும், தில்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளதைப் போல, தமிழகத்திலும் பொறியியல் கல்விக் கட்டணத்தை உயர்த்தித் தரவேண்டும் என பொறியியல் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவிடம் தனியார் பொறியியல் கல்லூரிகள் இம்முறையும் கோரிக்கை விடுத்துள்ளன. எனவே, கட்டணம் மாற்றியமைக்கப்படுமா என்பதை அந்தக் குழுதான் முடிவு செய்யும் என்றார் அவர்.