எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) திங்கள்கிழமை (ஏப்.15) முதல் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) அடுத்த மாதம் 5-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
அதில் பங்கேற்பதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையில் 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அந்த கால அவகாசத்துக்குள் நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் நீட் தேர்வில் பங்கேற்பதற்காக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் என்பது குறிப்பிடத்தக்க தகவல்.
இந்நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளன. அவற்றை www.nta.ac.in / www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன. நீட் தேர்வானது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு தமிழில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே அமைக்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here