தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தபால் வாக்குகள் அளிக்கப்பட்டன. பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களிலேயே வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளில் வாக்குச் சீட்டுகளை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் செலுத்தினர்.
 தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான பணியில் 3 லட்சம் பேர் ஈடுபட உள்ளனர். அதில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர்.
 இரண்டு கட்ட பயிற்சிகள்: தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே முதல் கட்டப் பயிற்சிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில், இரண்டாம் கட்டப் பயிற்சி தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தப் பயிற்சியின்போது தபால் வாக்குகள் அளிக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக முதல் கட்டப் பயிற்சியின்போது, தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களின் வாக்காளர் அடையாள அட்டையின் நகல் உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டன. இந்த நிலையில், இரண்டாம் கட்டப் பயிற்சியின் போது பல இடங்களில் தபால் வாக்குகள் விநியோகிக்கப்பட்டன.
 அதேசமயம், தமிழகத்தின் சில இடங்களில் தபால் வாக்குகள் அளிக்கப்படவில்லை என புகார் எழுந்தது.
 தேர்தல் பிரசாரம்: தபால் வாக்குகள் அளிக்கப்பட்ட இடங்களில் புதியதாக வேறொரு பிரச்னை எழுப்பப்பட்டது.
 அதாவது தபால் வாக்குகள் விநியோகம் செய்யப்பட்ட இடத்திலேயே ஒரு குறிப்பிட்ட கட்சி, வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி பயிற்சியில் ஈடுபட்ட ஊழியர்களை சிலர் வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சில முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி தரப்பட்டு ஒரு குறிப்பிட்ட கட்சி மற்றும் அதன் வாக்காளருக்கு வாக்களிக்கும்படி பயிற்சி மையத்தில் இருந்த சில ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 இதனால், பல பயிற்சி மையங்களில் பரபரப்பும், சூடான விவாதங்களும் எழுந்ததாக பயிற்சியில் பங்கேற்ற ஊழியர்கள் தெரிவித்தனர்.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here