BRAILY


பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக, பிரெய்லி முறை கொண்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதி அளித்தார்.
 மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. தேர்தலில் அனைத்துத் தரப்பினரும் வாக்களிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு வசதிகள் செய்யப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
 மாற்றுத் திறனாளிகளிடம் ஆலோசனை: தேர்தலில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதை உறுதி செய்ய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், அவர்களுக்கான தேவைகளை அறிவதற்காக மாற்றுத் திறனாளிகள் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் சிம்மசந்திரன் உள்ளிட்ட பலரும் அதில் பங்கேற்றனர்.
 பிரெய்லி முறை: இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்து வகையான மாற்றுத் திறனாளிகள் சுமார் 8 லட்சம் பேர் வாக்களிப்பதற்கு வசதியாக அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் பிரெய்லி முறை பயன்படுத்தப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உறுதி அளித்துள்ளார். அதன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்காளரின் பெயர், சின்னத்துக்கு எதிரே உள்ள பொத்தானை அடுத்து இந்த பிரெய்லி முறை இருக்கும். பிரெய்லி முறையை தொட்டு உணர்ந்து அதன்பின் அருகிலுள்ள பொத்தானை அழுத்தி தங்களுக்கு விருப்பமான வேட்பாளருக்கு பார்வையற்ற மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.
 மேலும், வாக்குச்சாவடியில் இருந்து 100 முதல் 150 மீட்டர் தொலைவில் இருந்தே மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டுமென்ற கோரிக்கை தேர்தல் துறையிடம் வைக்கப்பட்டுள்ளதாக மாற்றுத் திறனாளிகள் தெரிவித்தனர்.
 மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பரவலாக விளம்பரப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 மேலும், தங்களுக்குத் தேவையான வசதிகளை கேட்டுப் பெறும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமெனவும் தலைமைத் தேர்தல் அதிகாரியை மாற்றுத் திறனாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.
 எப்படி அறியலாம்?: பிரெய்லி முறையிலான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையற்ற மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அறிந்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு மாவட்ட மாற்றுத் திறனாளி மறுவாழ்வு அதிகாரியிடம் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சென்று பிரெய்லி முறையில் வாக்களிப்பது
 எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here