மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க 48 கல்லூரிகள் விண்ணப்பம்
2019-20-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும், துறைகளில் கூடுதல் பிரிவைத் தொடங்க அனுமதிக்குமாறும் இதுவரை 48 கலை-அறிவியல் கல்லூரிகள் சென்னைப் பல்கலைக் கழகத்திடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்திருக்கிறது. அதிக ஆர்வம் காரணமாக இளநிலைப் படிப்புகளில் கூடுதலாக 5,500 இடங்களை அதிகரித்துக் கொள்ளவும், முதுநிலை பட்டப் படிப்புகளில் 1200 இடங்களை கூடுதலாக அனுமதிக்கவும் சென்னை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், கலை-அறிவியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம், குறிப்பாக பி.காம். படிப்பு மீதான ஆர்வம் இந்த ஆண்டும் தொடர்வது உறுதியாகியிருக்கிறது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கை, வேலைவாய்ப்பு இன்மை போன்ற காரணங்களால் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே படிப்படியாகக் குறைந்து வருகிறது. அதே நேரம், கலை, அறிவியல் படிப்புகள் மீதான ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. இது 2019-ஆம் ஆண்டிலும் தொடர்கிறது.
அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான விண்ணப்ப விநியோகம் மே 6-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அதற்குள்ளாகவே, விண்ணப்ப விநியோகம் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, தேசிய உயர் கல்வி நிறுவன (கல்லூரிகள்) தரவரிசைப் பட்டியலில் 3-ஆம் இடம் பிடித்து அசத்திய சென்னை மாநிலக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை வரை ஆன்-லைன் மூலம் 11,000 விண்ணப்பங்களும், நேரடியாக 3,000 விண்ணப்பங்களும் என மொத்தம் 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மொத்தமாகவே 13,500 விண்ணப்பங்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டிருந்ததாகவும், இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாகவும் அக் கல்லூரி முதல்வர் ராவணன் கூறினார்.
இதுபோல சென்னை ராணி மேரிக் கல்லூரி, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி உள்பட பல தனியார் கல்லூரிகளிலும் சென்ற ஆண்டைக் காட்டிலும் 500 விண்ணப்பங்கள் கூடுதலாக இந்த ஆண்டு பெறப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மேலும் பி.காம் போன்ற குறிப்பிட்ட பிரிவில் கூடுதலாக 4-ஆவது பிரிவைத் தொடங்கவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.
இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியது:
கலை-அறிவியல் படிப்புகள் மீது மாணவர்கள் ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, 2019-2020-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும், கூடுதல் வகுப்புப் பிரிவைத் தொடங்கவும் 48 கல்லூரிகள் பல்கலைக் கழகத்திடம் விண்ணப்பித்துள்ளன. இதில் 6 கல்லூரிகள் ஒரே ஒரு படிப்பை மட்டும் வழங்கும் ஸ்டேன்ட் அலோன் கல்லூரிகள் ஆகும். இந்தக் கல்லூரிகள் அனைத்தும் 81 இளநிலைப் படிப்புகளிலும், 33 முதுநிலைப் படிப்புகளிலும் இடங்களை அதிகரித்துக் கொள்ள அனுமதி கேட்டுள்ளன. இவர்களில் 46 கல்லூரிகள் பி.காம். படிப்பில் இடங்களை அதிகரிக்கவும், கூடுதல் பிரிவைத் தொடங்கவும் அனுமதி கோரியுள்ளன.
இதை ஏற்று, 2019-20-ஆம் கல்வியாண்டில் இளநிலைப் படிப்புகளில் கூடுதலாக 5,500 இடங்களை அதிகரித்துக் கொள்ளவும், முதுநிலை பட்டப் படிப்புகளில் 1,200 இடங்களை கூடுதலாக அனுமதிக்கவும் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
மேலும், கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று பி.காம். போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் கூடுதலாக 4-ஆவது வகுப்புப் பிரிவை அனுமதிக்கவும் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
பி.ஏ. தமிழ் மீதும் ஆர்வம்: கடந்த ஆண்டுகளைப் போலவே பி.காம். படிப்பில் இடங்களை அதிகரிக்க அதிக கல்லூரிகள் இந்த ஆண்டும் விண்ணப்பித்திருக்கின்றன. மேலும், இந்த ஆண்டு புதிதாக பி.ஏ. தமிழ் படிப்பில் கூடுதல் இடங்களை அதிகரிக்கவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கல்லூரிகள் விண்ணப்பித்திருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழ்த் துறைகளில் அதிக சேர்க்கை இல்லாமல் இருந்து வந்ததால், இப்போது தேவை அதிகரித்திருக்கலாம் என்றும் துணைவேந்தர் துரைசாமி கூறினார்.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here