அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, 'பயோமெட்ரிக்' வருகை பதிவு வரும் ஜூன் 3ல் துவங்கவுள்ளதால், பள்ளிகள்தோறும் விரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இதுநாள் வரையில் இவர்களுக்கான வருகை பதிவேடு நோட்டு புத்தகங்களிலே பராமரிக்கப்படுகிறது.

இதனால் ஏற்படும் முறைகேடுகளை தவிர்க்கவும், பணியாளர்களை கண்காணிக்க ஏதுவாகவும் பயோமெட்ரிக் வருகை பதிவு தொழில்நுட்பத்தை அமலாக்க உள்ளதாக பள்ளி கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.இதன்கீழ், பெரும்பாலான அரசு பள்ளிகளில் 'பயோமெட்ரிக்' மெஷின் வினியோகித்து, சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன.இந்நிலையில், வரும் ஜூன் 3 முதலே ஆசிரியர்களுக்கு, 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு கட்டாயம் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில் முதற்கட்டமாக, கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு மட்டும் பயோமெட்ரிக் மெஷின் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மட்டும் கைவிரல் ரேகைகளை பதிந்து வருகின்றனர். ஒரு சில பள்ளிகளில் சோதனை அடிப்படையில் கடந்த ஒரு மாதமாக பயோ மெட்ரிக் கருவி பயன்பாட்டில் உள்ளது.

இருப்பினும், ஜூன் 3ல் முழுமையாக, அமல்படுத்த இருப்பதால், ஆசிரியர்கள், மற்றும் பணியாளர்களின் விவரங்களை ஆன்லைனில் விரைவாக பதிவேற்றம் செய்யுமாறு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெல்லா கூறியதாவது:மாதிரி பள்ளி என்பதால் ஜெய்வாபாய் பள்ளியில் கடந்த பிப்., மார்ச் மாதங்களிலே, 7 பயோ மெட்ரிக் கருவி வழங்கப்பட்டுள்ளன. இப்பள்ளியில் உள்ள, 146 ஆசிரியர்கள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்துள்ளனர்.இதன்கீழ், ஆசிரியர்கள் காலை 9:00 மணிக்குள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.
Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here