போலிச் சான்றிதழ்களை தடுக்கும் வகையில், பட்டப்படிப்பு சான்றிதழ்களில் க்யூஆர் குறியீடு, கல்லூரியின் முப்பரிமாண வடிவம்(ஹாலோகிராம்) ஆகியவற்றை அச்சிடுமாறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் துணை வேந்தர்களுக்கு யுஜிசி செயலர் ரஜ்னிஷ் ஜெயின் திங்கள்கிழமை அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
போலிச் சான்றிதழ்களைத் தடுக்கும் வகையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ் ஆகியவற்றில் மாணவர்களின் புகைப்படம், க்யூஆர் குறியீடு, கல்லூரியின் ஹாலோகிராம் வடிவம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை சான்றிதழ்களில் அச்சிட வேண்டும்.
இதன் மூலம், பட்டப்படிப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் நாட்டில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான முறை பின்பற்றப்படும்.
 க்யூஆர் குறியீடு இருப்பதால், மாணவர்களின் சான்றிதழ்களை எளிதாக சரிபார்க்க இயலும்.
அதுமட்டுமன்றி, மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்த பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியின் இடம், கல்வி முறை (தொலைதூர கல்வி அல்லது கல்லூரி சென்று படித்தது) உள்ளிட்ட தகவல்களையும் சான்றிதழ்களில் இணைக்க வேண்டும்.
மாணவர்களின் கல்வி குறித்த தகவல்களை சரியாக அச்சிட வேண்டும். மாணவர்களின் நலனுக்காக இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here