amma-laptop

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்கள் 5.40 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட 18 பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் 1,586 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா சம்பந்தப்பட்ட பள்ளிகளில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா தலைமை வகித்தார். விழாவில் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கிப் பேசியதாவது:
தமிழகத்தில் பிளஸ் 2 படிக்கும் சுமார் 5.40 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இப்போது பிளஸ் 1 படிக்கும் சுமார் 5.40 லட்சம் மாணவ, மாணவியருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்பறைகள் முழுவதும் இணையதள வசதியுடன் கணினிமயமாக்கப்படவுள்ளன. 7,000 பள்ளிகளில் மெய்நிகர் (விர்ச்சுவல்) வகுப்பறைகள் தொடங்கப்படவுள்ளன என்றார்.

தொடர்ந்து, குருமந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவுப் பணியாளர்களுக்கு சுகாதாரக் கருவிகளையும், வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் தனியார் இ-சேவை மையம் நடத்துவற்கான உத்தரவையும் அமைச்சர் வழங்கினார். மேலும், நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், கூடக்கரை மேல்நிலைப் பள்ளியில் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூ. 1.03 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை திறந்துவைத்தார். 

விழாவில் ஈரோடு ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், கோபி கோட்டாட்சியர் சி.ஜெயராமன், முதன்மைக் கல்வி அலுவலர் ரா.பாலமுரளி, மாவட்டக் கல்வி அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here