70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகள்: முதல்வர் தொடங்கி வைத்தார்

இந்தத் திட்டத்துக்கான முயற்சிகள் கடந்த 2011-ஆம் ஆண்டே தொடங்கப்பட்டாலும் மாணவ, மாணவிகளின் தகவல்களைச் சேகரிப்பது, மாற்றுச் சான்றிதழ் பெற்றுச் சென்ற மாணவர்களின் பெயர்களை நீக்குவது, திரட்டப்பட்ட தகவல்களை பள்ளிக் கல்வித்துறையின் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது என தொடர் பணிகளாலும், இடையிடையே ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல்களாலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. 
இந்த நிலையில், 2019-2020-ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 70 லட்சம் மாணவர்களுக்கு ரூ.12 கோடியே 70 லட்சம் செலவில் மாணவர்களின் சுயவிவரங்களைப் பதிவு செய்யும் வசதியுடன் ஸ்மார்ட் அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்கு அடையாளமாக முதல்வர் பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் 7 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் அட்டைகளை வழங்கி திட்டத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
என்னென்ன சிறப்பம்சங்கள்: மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஸ்மார்ட் அட்டையில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவரின் பெயர், தந்தை பெயர், யூனிக் அடையாள அட்டை எண், பள்ளியின் பெயர், மாணவரின் முகவரி, பிறந்த தேதி, புகைப்படம் ஆகியவை இடம் பெறுகிறது. இது தவிர கியூ-ஆர் கோடு என்று சொல்லக்கூடிய நவீன தொழில்நுட்பமும் இதில் இடம்பெறுகிறது. கியூ-ஆர் கோடினை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்து மாணவர்கள் பற்றிய முழு விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் வலைதளங்களிலும் எளிதாக மாணவர்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். இந்த அடையாள அட்டை தவறினால் கூட மாணவர் பற்றிய தகவல்களை பெற முடியும். 
இந்த நிகழ்ச்சியின்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here