தமிழகத்தில் முதல் முறையாக கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு ஆன்-லைன் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள் மற்றும் இளநிலை கணினி அறிவியல் படிப்புடன் பி.எட். முடித்தவர்களும், தேசிய கல்வியியல் கவுன்சில் விதிகளின்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான, கணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்புடன் பி.எட்., முடித்தவர்களும் மட்டுமே தேர்வு செய்யப்படுவர் என அண்மையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியிட்டது.
இதைப் பின்பற்றி, 814 கணினி ஆசிரியர் காலியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிட்டது. இந்தத் தேர்வில் பங்கேற்க ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆண்கள் 7,546 பேர், பெண்கள் 23,287 பேர் என மொத்தம் 30,833 பேர் விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில், கணினி ஆசிரியர் நிலை 1-க்கான (முதுநிலை நிலை) கணினி வழித் தேர்வு ஆன்-லைன் மூலமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தேர்வர்கள் நுழைவுச்சீட்டினை பிரதி எடுத்து ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை, விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதி ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு மையத்தின் கதவுகள் மூடும் நேரத்துக்குப் (காலை 9.15) பின்னர் வந்தால் தேர்வர்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவர். தேர்வு அனுமதிச் சீட்டினை தேர்வு மையத்திலேயே தக்கவைத்துக் கொள்ளப்படும். தேர்வர்களின் எதிர்காலத் தேவைக்கு அனுமதிச் சீட்டினைப் பிரதி எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here