மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஒருபோதும் ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்த ப்ளஸ் 2 மாணவரை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மூன்று பேரையும் விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி காவல்துறையினர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி டீக்கா ராமன், மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஒருபோதும் ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தார்.

மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், நல்ல பழக்க வழக்கங்களையும் கற்பிக்கும் நோக்கத்தில் ஆசிரியர்கள் வழங்கும் தண்டனை காரணமாக நடைபெறும் தற்கொலைகளை, ஆசிரியர்கள் தூண்டியதாக கருத முடியாது எனவும் தெரிவித்தார்.