நல்லாசிரியர் விருது வழங்கும் புதியவிதிமுறை காரணமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், யாரை விருதுக்கு தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்க தகுதியான நபர்களை தேர்வு செய்ய 17 வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

இதில், சுயஒழுக்கம், மாணவர்கள் தேர்ச்சி விகிதம், மாணவர்கள் சேர்ப்பு, டியூசன் எடுக்காத ஆசிரியர்கள், குறைந்தபட்சம் 15 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள், அரசியல் கட்சிகளை சாராதவர்கள், குற்றப்பின்னணி இல்லாதவர்கள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாதவர்கள் உள்பட 17 வழிமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்து பரிந்துரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி பரிந்துரை செய்யும் குழுவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 



இந்த விதிமுறையில், குற்ற நடவடிக்கை நிலுவையில் உள்ளவர்களை பரிந்துரை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும், போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் பணியாற்றிய ஆசிரியர்கள் அனைவரும் 5 ஆண்டுக்கு குறைவாக தகுதியுள்ளவர்கள். விதிமுறை படி, குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இவர்களை தேர்வு செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பமான சூழ்நிலையில், யாருக்கு நல்லாசிரியர் விருது வழங்குவது என கல்வித்துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து கலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில், “நல்லாசிரியர் விருது விதிமுறையால் ஜாக்டோஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் ஒருவருக்கு கூட நல்லாசிரியர் விருது கிடைக்காது என்பதை பள்ளி கல்வித்துறை இயக்குனர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். குழப்பமான விதிமுறையால் நல்லாசிரியர் விருது பெற யாருக்கும் தகுதியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாற்றம் செய்ய வேண்டும்” என்றார்.


Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here