விராலிமலை,அக்.30:விராலிமலையை அடுத்த  கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்முன்னாள்  மாணவர்கள்,முன்னாள் ஆசிரியர்கள் ஒன்றிணைந்த ஆனந்த சங்கம விழா நடைபெற்றது.விழாவில் முன்னாள் பள்ளிமாணவர்கள் சார்பாக 7ஆயிரம் பனை விதைகளை ஊர்ப்பொதுமக்களுக்கும்,1500 விதைப்பந்துகளை பள்ளி மாணவர்களுக்கும் வழங்கினார்கள்.  

விழா  குறித்து பள்ளியின் முன்னாள் மாணவர் சங்க செயலாளர் கந்தசாமி கூறியதாவது: கடந்த இரண்டு மாத காலமாகவே இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் அனைவரும் ஒன்றாக ஓர் வாட்ஸ் குழு ஏற்படுத்தி பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினோம்.முதற்கட்டமாக தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தை அழிவில் இருந்து பாதுகாக்கவும், நிலத்தடி நீரைச் சேமித்து, மண் அரிப்பை தடுக்கவும் பனை மரம் வளர்ப்பில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்ற விஷயத்தை இன்றைய மாணவர்களிடமும்,பொதுமக்களிடமும் உணர்த்த விரும்பினோம்.அதற்காக பொன்னமராவதி அருகே உள்ள நகரப்பட்டி என்ற கிராமத்தில் 7000 பனை விதைகளை சேகரித்து வந்து அதை பள்ளியில் பதியம் போட்டு பாதுகாத்து வந்தோம். அதனை இன்று ஓர் விழாவாக வைத்து பொதுமக்களிடம் கொடுத்துள்ளோம்.பின்பு பொதுமக்களிடம் ஏரி, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள பனை மரங்கள் விறகுக்காக வெட்டி அழிக்கப்பட்டு வருவதால் நாளுக்கு நாள் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, மீண்டும் பனை மரங்களை வளர்த்து பாதுகாக்க வேண்டும் என கூறினோம்.
 எங்களது கிராமத்தில் உள்ள முன்னாள் மாணவர்களும்,இளைஞர்களும், பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் அதனை பெற்றுக் கொண்டு ஏரி, ஆறு, குளம், குட்டைகளில் நடுவதாக கூறி வாங்கிச் சென்றுள்ளனர்.எங்களது நோக்கமே இப்பள்ளியை சுற்றியுள்ள ராமகவுண்டன்பட்டி,ராஜாளிபட்டி,சரளபட்டி உள்ளிட்ட 40 கிராம  பகுதிகளில் பனைமரங்களை நட்டு வளர்க்க வேண்டும் என்பதே ஆகும்.

மேலும் மரங்கள் வளர்த்து பூமியை பசுமையாக்கும் நோக்கில்  1500 விதைப்பந்து தயாரித்து பள்ளி மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம். வழங்கும் போது மரங்களை வெட்டியதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, ஓசோன் மண்டலத்தில் ஓட்டையால் பருவநிலை மாற்றம், இயற்கை சீற்றம் என பல வகையில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனாலும் இயற்கையை அழிக்கும் நிகழ்வுகள் தொடர்கிறது. இந்நிலையில் இருந்து  பசுமையை பாதுகாக்க மரக்கன்றுகள் வளர்க்க  நாங்கள் எடுத்துள்ள புது முயற்சியே இந்த விதைப்பந்து ஆகும்.விதைப்பந்து தயாரிக்க  முளைப்பு திறனுக்கு ஏற்ற மண், உலர்ந்த எரு குப்பை, நீர் சேர்த்து பிசைந்து உருண்டையாக்கி அதனுள் உலர்ந்த வேப்ப விதை,புங்கவிதை, மயிறை விதை என பல்வேறு விதைகளை வைத்து பந்து வடிவமாக உருட்டினோம்.. ஒவ்வொரு உருண்டையிலும் 6 முதல் 8 வேப்ப மற்றும் புங்கை விதைகள் இருக்கும். இதனை மைதானத்தில் சில நாட்கள் உலர வைத்து விதைப்பந்து தயார் செய்தோம் .
இந்த விதைப்பந்துகளை காகித பைகளில் வைத்து மாணவர்களிடம் கொடுத்தோம்.
அப்போது மாணவர்களிடம் அதிக மரம் வெட்டியதால் வெப்பம் அதிகரித்துள்ளது. பூமியை பசுமையாக்குவது நம் கடமை. எனவே, இந்த விதைப்பந்தினை நீங்கள் போகும் வழியில் நீர் ஆதாரமான கண்மாய் கரை, ஓடைகள், ஆற்றோரங்களில் வீசி எறியுங்கள். ஈரப்பதமானசூழ்நிலையில் பந்தில் உள்ள விதை முளைத்துவிடும். அங்கு மரக்கன்று வளர்ந்து மரமாகிவிடும்,” என, வேண்டுகோள் விடுத்தோம். இதனை தட்டாமல் அனைத்து மாணவர்களும்  வாங்கி சென்றனர்.. வாங்கிச் சென்ற அதனை பல இடங்களில்  வீசி சென்றனர்.எங்களது நோக்கமே 
கிராமத்தை சுற்றி மரங்கள் வளர்த்து பசுமையாக்குவதே
என்றார்.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளித் தலைமையாசிரியர் இரா.சிவக்குமார் வரவேற்றுப் பேசினார்.

முன்னதாக இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் எஸ்.ராஜேந்திரன்,இலுப்பூர் மாவட்ட பள்ளித் துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி ஆகியோர் மாணவ,மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில்   பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் காளமேக கவுண்டர் தலைமை வகித்து பனை விதைகளை ஊர்ப்பொதுமக்கள் மற்றும் மாணவ,மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். 

விழாவில் விராலிமலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுரேஷ்,இலுப்பூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜெயராமன்,இலுப்பூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எழிலரசி ஆகியோர் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விதைப்பந்தினை வழங்கினார்கள். 

முடிவில் இப்பள்ளியில் பணியாற்றிய முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் இந்நாள் ஆசிரியர்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.மேலும் முன்னாள் மாணவர்கள்  மூலம் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

நிலவேம்பு கசாயம் பொடி விராலிமலை அரசு மருத்துவமனை மூலமும்,விதைகள் விராலிமலை வேளாண்மைத் துறையின் மூலமும் இலவசமாக பெறப்பட்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் கந்தசாமி,சபரிவாசன்,ஆனந்தராஜ் ,அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.