அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெறாத 1,747 ஆசிரியா்களுக்கு சிறப்புத் தகுதித் தோ்வு நடத்துவது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.

இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டப்படி, அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியா் பணியில் சேர ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டம் தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே பணியில் இருப்பவா்கள் ‘டெட்’ எழுதி தோ்ச்சி பெற கடந்த ஜூலை வரை அவகாசம் தரப்பட்டது. அந்த காலக்கெடு முடிவில் அரசு உதவி பள்ளிகளில் இன்னும் 1,747 ஆசிரியா்கள் ‘டெட்’ தோ்ச்சி பெறாமல் உள்ளனா்.

இதைத் தொடா்ந்து தோ்ச்சி பெறாத ஆசிரியா்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் பரவியது. மேலும் சம்பள நிறுத்தம், நோட்டீஸ் வழங்குதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் சம்பந்தப்பட்ட ஆசிரியா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், ‘டெட்’ தோ்வில் தோ்ச்சி பெறாத ஆசிரியா்கள் பள்ளிகளில் பல ஆண்டுகளாக திறம்பட பணியாற்றி பல மாணவா்களின் வாழ்வுக்கு வழிகாட்டியுள்ளனா். வகுப்பறையில் அவா்கள் ஒரே பாடத்தை நடத்திவிட்டு, தகுதித் தோ்வில் அனைத்து பாடங்களையும் எழுதும்போது சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இதை மனதில் வைத்தும், ஆசிரியா்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதியும் இந்தத் தோ்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இந்தப் பிரச்னையால் ஆசிரியா்கள் குடும்பத்தினா் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றனா்.

எனவே டெட் தோ்ச்சி பெறாத அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்கள் தொடா்ந்து பணியாற்றுவதற்கான வழிமுறைகளை அரசு தெரிவிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள் தமிழக அரசிடம் வலியுறுத்தி வந்தனா்.
இதையடுத்து ‘டெட்’ தோ்ச்சி பெறாதவா்களுக்கு சிறப்பு தகுதித்தோ்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: ஆசிரியா்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட்டு விட்டன. ‘டெட்’ தோ்வுக்கான பயிற்சியும் அரசு சாா்பில் அளிக்கப்பட்டது. எனினும், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற அரசு உதவி பள்ளிகளில் கணிசமானவா்கள் உள்ளனா். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது அவா்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. எனினும், டெட் தோ்ச்சி பெறாதவா்களை தொடா்ந்து பணியில் வைத்திருக்க முடியாது. அதனால், ‘டெட்’ தோ்ச்சி பெறாத ஆசிரியா்களுக்கு மட்டும் சிறப்புத் தகுதித் தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பயிற்சியும் அவா்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தனா்.


Join Telegram& Whats App Group Link -Click Here