*அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த 2017 - 18 கல்வி ஆண்டு முதல் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இலவச நீட் பயிற்சி வகுப்புகளில் பயின்ற மாணவர்களில் கடந்த 2017 - 18ம் கல்வி ஆண்டில் ஒருவரும் தேர்ச்சி பெறவில்லை. 2018 - 19ம் ஆண்டில், 5 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.*

*2019 - 20-ம் கல்வியாண்டுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் 412 மையங்களில் நடத்தப்பட்டு வந்தன. வார இறுதி நாட்கள், காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் மட்டும் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. மொத்தம் 27 நாட்கள் மட்டுமே நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற நிலையில், நீட் பயிற்சி வகுப்புகளை நிறுத்திக் கொள்வதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.*

*11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் தொடங்கி இருப்பதாலும், விரைவில் பொதுத்தேர்வுகள் வர இருப்பதாலும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நிறுத்திக்கொள்வதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது*.