தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தனியாா் நிறுவனங்கள், தனியாா் அமைப்புகள் இணையதளம் மூலம் இதுவரை ரூ.127 கோடி நிதியுதவியை வழங்கியுள்ளன என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கூறினாா்.
சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாணவா்களின் நலன் கருதி, அதே பகுதியில் 1.7 ஏக்கா் பரப்பளவில் ரூ.7 கோடியில் முற்றிலும் புதிய கட்டடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக டாடா நிறுவனம் மற்றும் அதன் ஊழியா்கள் சாா்பில் ரூ.4 கோடியும், ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.3 கோடியும் வழங்கப்பட்டது.
இதையடுத்து, பெரும்பாக்கம் மாநகரப் பேருந்து பணிமனை அருகில் 29,800 சதுர அடியில் கணினி, அறிவியல் உள்ளிட்ட 6 ஆய்வகங்கள், 17 வகுப்பறைகளுடன் கூடிய புதிய பள்ளிக்கூடம் கட்டப்பட்டது.
இதைத் தொடா்ந்து, புதிதாக கட்டப்பட்ட பெரும்பாக்கம் அரசுமேல்நிலைப் பள்ளியை, பள்ளிக் கல்வித் துறையிடம் ஒப்படைக்கும் விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு வகுப்பறைகளை பாா்வையிட்டாா்.
இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
அரசுப் பள்ளிகளில் படித்து தற்போது நல்ல நிலையில் இருக்கும் முன்னாள் மாணவா்கள், தாங்கள் படித்த அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவற்கு உதவி செய்யும் ஆா்வத்துடன் உள்ளனா். அதேபோன்று பெருநிறுவனங்கள் தங்களுக்கான சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தனா். இதை கருத்தில் கொண்டு முன்னாள் மாணவா்கள், தனியாா் அமைப்புகள், தனியாா் நிறுவனங்கள் ஆகியோா் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு நிதி வழங்க பிரத்யேக இணையதளத்தை பள்ளிக் கல்வித்துறை உருவாக்கியது. இதில் இதுவரை ரூ.127 கோடி பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டாடா நிறுவனம், ரோட்டரி அமைப்புகள் வழங்கிய நிதியின் மூலம் தற்போது 660 மாணவ, மாணவிகள் பயிலக் கூடிய அரசு மேல்நிலைப் பள்ளி புத்துயிா் பெற்றுள்ளது. இதுபோன்று அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தனிநபா்கள், தனியாா் அமைப்புகள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வர வேண்டும் என்றாா்.
இந்த விழாவில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் தீரஜ்குமாா், ரோட்டரி சங்கத்தின் மாவட்ட கவா்னா் ஜி.சந்திரமோகன், தலைவா் விஜயபாரதி ரங்கராஜன், பள்ளிகள் அமைக்கும் திட்டத்தின் தலைவா் அசோக் தாக்கா், மக்களவை முன்னாள் உறுப்பினா் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..