சென்னை: தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் உள்ள குளறுபடிகளால் 5, 8ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன் காரணமாக தமிழகத்தில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து, தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது. இதனால் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என பலரும் மனஉளைச்சல் அடைந்தனர். இது தமிழக அரசுக்கு எதிர்ப்பு அலையாக மாறியது. கல்வித்துறை மீது பல்வேறு தரப்பினரும் கடும் குற்றச்சாட்டுகளை வைத்தனர். குறிப்பாக, தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளிகள், 1 முதல் 8ம் வகுப்பு வரை நடக்கும் நடுநிலைப் பள்ளிகளில் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 3வது பருவ முறை பாடப்புத்தகங்களில், பொருளடக்கம் என்ற பகுதியில் பட்டியலிட்டு சில விவரங்களை ஆசிரியர்களுக்கு வழங்கினர். அதன்படி, சில பாடங்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்த வேண்டும். இதைப் பின்பற்றி ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வந்தனர். ஆனால், 5, 8ம் வகுப்பு தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்த வேண்டும் என்று அட்டவணை வெளியிட்டதால் குழப்பம் அதிகரித்தது.

சில பாடங்களை மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் நடத்த வேண்டும் என்று தெரிவித்த பின்னர் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க முடியாது. பிப்ரவரி மாதத்துக்குள் பாடங்களை நடத்தி முடிப்பது சாத்தியமில்லை.மாணவர்களும் குறுகிய காலத்தில் கற்றல் அனுபவங்களை பெற முடியாது. அதனால், மேற்கண்ட தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து வந்தனர். இதுதவிர, முதல் பருவம், இரண்டாம் பருவத்துக்கான பாடங்களை நடத்தி முடித்து அவற்றுக்கு தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவற்றை மாணவர்கள் படித்து பொதுத் தேர்வில் எழுத வேண்டும் என்பது கடினமான காரியம்.

அதனால் மாணவர்கள் மீண்டும் இரண்டு பருவ பாடப்புத்தகங்களை படிக்க வேண்டிய நிலை ஏற்படும். திட்டமிடப்படாமல் தேர்வு தேதி அறிவித்ததால் பாடம் நடத்துவதில் குளறுபடி ஏற்பட்டது. அதனால் தேர்வுகளை நடத்த வேண்டாம் என்று ஆசிரியர்கள் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 5, 8ம் வகுப்புகளுக்கு 60 மதிப்பெண்களுக்கு எழுத்து தேர்வு எழுத வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாடப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து ஆசிரியர்கள் தரப்பில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில் தான் மேற்கண்ட தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்தார்.



Join Telegram& Whats App Group Link -Click Here