மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று பிறந்தநாள் கொண்டாடிய ஆறாம் வகுப்பு மாணவி காவியாவிற்கு சக மாணவ, மாணவிகள் மரக்கன்றுகளை வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து மரக்கன்றுகளைப் பிறந்தநாள் பரிசாக அளித்த இந்த வித்தியாசமான முயற்சியினைப் பள்ளியின் தலைமையாசிரியை அமுதா  மற்றும்  ஆசிரியர்கள் முனைவர் மணி கணேசன், அர்ச்சுணன், மோகன், செந்தில்குமார், ஆசிரியை நூர்ஜஹான் ஆகியோர் வெகுவாகப் பாராட்டினர். இதுகுறித்து மாணவர்களிடம் கேட்டபோது, "வகுப்பறைகளில் வரும் ஒவ்வொரு ஆசிரியரும் புவிவெப்பமயமாதலைத் தடுக்கும் வகையில் மரக்கன்றுகளை அதிகம் நட்டு வளர்க்க வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்தது எங்களுக்குள் ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் காரணமாக இனி பிறந்தநாள் கொண்டாடும் எங்களுடன் படிக்கும் சக மாணவ, மாணவிகளுக்கும் பரிசாக மரக்கன்றுகள் வழங்குவது என்று முடிவெடுத்து எங்கள் அன்பை வெளிக்காட்டியுள்ளோம். பிற பள்ளி மாணவர்களும் இதுபோன்று பயனுள்ள முறையில் பிறந்தநாள் மட்டுமல்லாது ஏனைய முக்கிய வீட்டு விழாக்களையும் மரக்கன்றுகளுடன் கொண்டாட முன்வந்தால் இன்னும் நாங்கள் மகிழ்வடைவோம்" என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர். ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் சிறுவர்களின் இச்செயலை வியந்து பாராட்டினர்.