குழந்தை பிறந்தால் மத்திய அரசு பெண் ஊழியர்கள் 3-வது குழந்தையின் பிரசவத்துக்கான பேறுகால விடுமுறை ஊதிய பலன்களை பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பாக அரக்கோணம் சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீராங்கனையாக பணியாற்றும் ஆயிஷாபேகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "எனக்கு முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தது. அதற்காக மத்திய அரசு விதிகளின்படி 6 மாதங்கள் பேறுகால விடுப்பும், ஊதியமும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் 3-வதாக தற்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இரண்டாவது பிரசவத்துக்கான பேறுகால விடுப்புக்கான ஊதிய பலன்களை வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எனவே எனக்கு 2-வது பிரசவத்துக்கான பேறுகால ஊதிய பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்" என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்திருந்தாலும், 2-வது பிரசவத்துக்கான பேறுகால விடுமுறையும், அந்த விடுமுறைக்கான ஊதிய பலன்களை பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது என கடந்தாண்டு ஜூன் 18-ம் தேதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசும், மத்திய தொழில் பாதுகாப்புப் படை இயக்குநரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை நேற்று (மார்ச் 2) விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
"இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்துள்ள தனி நீதிபதி பெண்களுக்கான பேறுகால உரிமை குறித்தும், தமிழக அரசின் பேறுகால விடுமுறை விதிகள் குறித்தும் விளக்கி தீர்ப்பளித்துள்ளார்.

ஆனால் இந்த வழக்கின் வாதியான ஆயிஷாபேகம் மத்திய அரசு ஊழியர். மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீராங்கனையான அவருக்கு மத்திய சிவில் சர்வீஸ் விதிகள் மட்டுமே பொருந்தும். அந்த விதிகளின்படி 2 குழந்தைகளுக்கு மட்டும் 180 நாட்கள் பேறுகால விடுப்பும், அதற்கான ஊதியமும் வழங்க வழிவகை உள்ளது. இரண்டாவது பிரசவத்துக்கு அல்ல.
ஆயிஷா பேகத்துக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3-வது குழந்தைக்கு பேறுகால ஊதிய சலுகைகள் கோர முடியாது.

 இரட்டைக் குழந்தைகள் என்றாலும்
 நேர இடைவெளி காரணமாக அக்குழந்தைகள் 2 குழந்தைகளாகவே கருதப்படுவர் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

ஆனால், ஆயிஷாபேகம் தரப்பில் இதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மத்திய அரசு விதிகளின்படி மத்திய அரசு ஊழியர் 3-வது குழந்தைக்கான பிரசவத்துக்கு பேறுகால விடுமுறை ஊதிய பலன்களை கோர முடியாது என்பதால் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

அதேநேரம், இதுபோன்ற அரிதிலும் அரிதான நேரங்களில் 2-வது பிரசவத்துக்கும் பேறுகால விடுமுறையுடன் நிறுத்திவிடாமல் அதற்கான ஊதியத்தை வழங்குவது தொடர்பாகவும் விதிகளை தளர்த்த மத்திய அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தகுந்த முடிவை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.